கடந்த 3 மாதங்களில் 187,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பள பாதிப்பு: மனிதவள அமைச்சு

சம்பளம் தொடர்பாகக் கடந்த மூன்று மாதங்களில் 187,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று கூறியது. பெரும்பாலானோர் கொவிட்-19 நெருக்கடியால் பெரிதும் பாதிப்புக்குள்ளான தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அதன் அறிக்கையில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் மார்ச் 12 முதல் கடந்த மூன்று மாதக் காலத்தில் செலவுகளை மிச்சப்படுத்தும் தங்களின் நடவடிக்கைகள், ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதன் தொடர்பில் 4,800க்கும் மேற்பட்ட முதலாளிகள் அமைச்சிடம் தெரிவித்து வருகின்றனர்.

சில நிறுவனங்கள் தங்களின் செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில் ஊழியர்களது சம்பளங்களைச் சுமார் 25% வரை குறைத்ததாகக் கூறப்படுகிறது.

அவ்வகையில் சம்பளம் தொடர்பாக ஹோட்டல் மற்றும் உணவுச் சேவைத் துறைகளில் 45,000 ஊழியர்களும் கட்டுமான நிறுவனங்களில் சுமார் 25,000 ஊழியர்களும் மொத்த வியாபார, சில்லறை வியாபார நிறுவனங்களில் சுமார் 19,000 ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.     

பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள், செலவுகளை  மிச்சப்படுத்தும் தங்களின் நடவடிக்கைகளால் ஊழியர்களின் சம்பளத்தில் பாதிப்பு இருந்தால் அதை மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி சம்பளமில்லா விடுப்பு, மாதாந்திரச் சம்பளப் பகுதிகளில் மாற்றம், குறைந்த நாட்களுக்கு வேலை போன்றவை நிறுவனங்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட திட்டங்கள் என்று மனிதவள அமைச்சும் நடுநிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகள் மீதான முத்தரப்புக் கூட்டணியும் தங்களின் கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

இந்நிலையில் தங்களின் நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டதாக 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமைச்சின் உதவியை நாடினர்.

இருப்பினும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் தேவை குறித்து ஊழியர் முதலாளி இடையே சரியான புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால்தான் சுமார் 74% புகார்கள் எழுந்ததாகக் கண்டறியப்பட்டது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online