சுடச் சுடச் செய்திகள்

தனியார், பொதுத் துறைகளைச் சேர்ந்த மக்கள் செயல் கட்சியின் புதிய வேட்பாளர்கள்

கட்சியின் முதல் உதவி பொதுச்செயலாளரான திரு ஹெங் சுவீ கியட், கொவிட்-19 சமூகங்களுக்கு எதிர்பார்த்திரா அழுத்தங்களை அளித்துள்ளது, பொருளியலை  பெரிதும் பாதித்துள்ளது, கட்டமைப்பு மாற்றங்களை துரிதப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில், மேலும் வலிமையுடன் மீண்டு வருவதற்கு சிங்கப்பூர் அதன் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர வேண்டும் என்றார் அவர். பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டி உள்ளன. வரும் மாதங்கள் சிங்கப்பூரின் எதிர்காலத்தை ஆழமாக வடிவமைக்கும் என்று கட்சியின் முதல் நான்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்திப் பேசிய அவர் கூறினார்.

“சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து மேலும் அதிகமான  புதிய முகங்களை கட்சி அறிமுகப்படுத்துகிறது. அவர்கள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளை பிரதிநிதிக்க முடியும், பல்வேறு அக்கறைகளை விவாதத்திற்குக் கொண்டுவர முடியும்”, என்று அவர் மேலும் கூறினார்.

நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள மசெகவின் தலைமையகத்தில் இருந்து நான்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி, அவர்கள் எளிய பின்னணிகளைக் கொண்டு வெற்றியைத் தொட்டவர்கள் என்றார். “புதிய வேட்பாளர்களில் தனியார் துறையைச் சேர்ந்த குமாரி ஹேனி சோ ஹுய் பின், ‘எம்எஸ்சி லா கார்ப்பரே‌ஷன்’ என்னும் சட்ட நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். 

“மற்றொரு வேட்பாளரான திரு டான் வீ பூன் ஹொங், யுஓபி வங்கியில் மூத்த துணைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இருவரும் சாதாரணக் கல்விமுறையில் படித்து வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கைத் தொழிலை அமைத்துக்கொண்டவர்கள் என்றார் திரு மசகோஸ்.

அடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ள வேட்பாளர்கள் பலதரப்பட்டவர்களாகவும்  கவனத்தை ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பர் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். 

 

பிரிகேடியர் ஜெனரல் டெஸ்மண்ட் டான் கோக் மெங், 50

சிங்கப்பூர் ஆயுதப்படையில் 28 ஆண்டுகள் சேவையாற்றிய இவர், காவலர் படைப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.  கடந்த 2017 ஜனவரி முதல் மக்கள் கழகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இம்மாதத் தொடக்கம் வரை செயலாற்றினார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர், புக்கிட் ஹோ சுவீ பகுதியில் சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவர். மக்கள் உண்மையாகவே விரும்பும் சமூகத்தைக் கட்டமைக்க அரசியலில் சேர்ந்ததாக இவர் கூறுகிறார். சிங்கப்பூரின் ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு இளையரும் வாழ்க்கையில் வெற்றிபெற பங்காற்ற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள்.

எட்வர்ட் சியா பிங் ஹுய், 36

தொழிலதிபர், டிம்பர் குழுமத்தின் இணை நிறுவனர், நிர்வாக இயக்குநர். இவரை தேசிய இளையர் சாதனை ஆலோசனை மன்றத்தில் சந்தித்தாக திரு ஹெங் கூறினார். சிறிய நடுத்தர நிறுவனங்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கும் இவர், இந்நிறுவனங்கள் பிழைத்திருக்க உதவினால் மட்டும் போதாது, அவை வலிமைபெற்று வளர உதவ வேண்டும் என்றார். சிறிய, நடுத்தர நிறுவனங்களில் வலிமை என்பது சிங்கப்பூரர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் என்றார் அவர். மனநல பிரச்சினைகள் குறித்து இவர் அக்கறை கொண்டுள்ளார்.

ஐவன் லிம் ஷோ சுவான், 42

ஓ’ நிலைத் தேர்ச்சியுடன் கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரீன் நிறுவனத்தில் சேர்ந்த இவர், அந்நிறுவனந்தின் உபகாரச் சம்பளம் பெற்று பட்டயப் படிப்பை முடித்து பகுதிநேரமாகப் படித்து பட்டம் பெற்றவர். தற்போது அந்த நிறுவனத்தின் பொது மேலாளராக உள்ளார். தஞ்சோங் பகார் வட்டாரத்தில் வளர்ந்த இவர், ஹெண்டர்சன்- டோசன் அடித்தள அமைப்புகளில் தொண்டாற்றி வந்துள்ளார். உதவி தேவைப்படுவோருக்கு தம்மால் முடிந்த உதவிகளைப் புரிய விழைகிறார். மூத்தோர், சமூக உதவிகள் தேவைப்படும் சிறார்கள் குறிப்பாக சிறப்பு தேவை உடையோர் மீது அக்கறை கொன்டுள்ளார்.

நாடியா அகமட் சமாடின், 30

டிஎஸ்எம்பி சட்ட நிறுவனத்தின் இணை இயக்குநர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பல்வேறு தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டு உதவி வருகிறார். சமூகத்தின் பலதரப்பட்டவர்களுடன் பல ஆண்டுகளாகத் தொடர்புடையவர், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டு வருகிறார். செங்சான்-சிலேத்தார் அடித்தள அமைப்புகளில் தொண்டு புரிகிறார். சிங்கப்பூர் பண்புகளை நிலைநாட்டி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அதேவேளையில் நிலைத்தன்மையான பொருளியல் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமது ஒத்த வயதினருக்கான குரலாக இவர் ஒலிக்க விரும்புகிறார்.

ஹேனி சோ ஹுய் பின், 33

எம்எஸ்சி சட்ட நிறுவனத்தின் இயக்குநர். வழக்கநிலைக் கல்வியை பெண்டமியர் உயர்நிலைப் பள்ளியில் முடித்த இவர், பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘சட்டம் மற்றும் நிர்வாக’ துறையில் பட்டயம் பெற்றார். சட்டத்துறையில் துணை ஊழியராகப் பணியாற்றி பின், வெளிநாட்டில் சட்டக்கல்வி பயின்றார். புக்கிட் பாஞ்சாங் அடித்தள அமைப்பில் கடந்த ஒன்பதாண்டுகளாக தொண்டூழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 16 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. குடியிருப்பாளர் குழுவில் சமூக சட்ட அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளார். மக்களிடையே சட்டம் குறித்த புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும் அதிகரிக்க விரும்புகிறார்.

டோன் வீ பூன் ஹோங், 43

உள்ளூர் வங்கியில் சேவையாற்றுகிறார். வழக்கநிலையில் படித்த இவர், தொடக்கக்கல்லூரியில் இடம் கிடைத்தபோதும் குடும்ப நிதிநிலை காரணமாக நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியில் சேர்ந்தார். தேசிய சேவைக்குப் பின் வங்கியில் சேர்ந்த இவர், பகுதி நேரமாக படித்து கணிதவியலில் பட்டம் பெற்றார். தொடர்ந்து இரு முதுகலைப் பட்டங்களும் பெற்றார். இரு பிள்ளைகளின் தந்தையான திரு வீ, கடந்த 16 ஆண்டுகளாக வெஸ்ட் கோஸ்ட் அடித்தளத் தலைவராகப் பணியாற்றுகிறார். வசதி குறைந்த மாணவர்கள், மனநலமற்றவர்கள், உள்ளூர் நிறு வனங்கள் எதிர்நோக்கும் சவால்களில் கவனம் செலுத்த விரும்புகிறார். 

கர்னல் முகமது ஃபாமி அலிமான், 48

தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் நிர்வாக, ஆய்வுப் பிரிவின் இயக்குநர். ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணியாற்றியவர், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் துணைத் தலைமை நிர்வாகியாகப் பதவி வகித்தவர். “எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால், அத்தியாவசியத் துறையில் சேவையாற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளர்களின் க‌ஷ்டத்தை அறிவேன். எனது குடியிருப்பாளர்கள், புதிய திறன்களைக் கற்று, பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவ விரும்புகிறேன்,” என்றார் அவர்.

யிப் ஹோன் வெங், 43

உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக வேலைப் பயணத்தைத் தொடங்கிய இவர் கல்வி, மனிதவளம், தற்காப்பு ஆகிய அமைச்சுகளில் கொள்கை, நிர்வாகம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையான இவர், அரசாங்கச் சேவை ஆணைய வெளிநாட்டு நிபுணத்துவ விருது பெற்றவர். முதியோரைப் பராமரிக்கும் சேவைகளை மேம்படுத்த உதவத் திட்டம் வைத்துள்ளதாகக் கூறுகிறார். உதவி தேவைப்படுவோரின் மனம் அறிந்து செயல்படுவதை எனது ஆசிரியர் பணி கற்றுக் கொடுத்துள்ளது என்கிறார் திரு வீ.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon