சிங்கப்பூரில் மேலும் 219 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 6 சம்பவங்கள்

சிங்கப்பூரில் மேலும் 219 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 6 சம்பவங்கள்

2 mins read
3a227b2f-f710-47f8-8cd1-71aadd631bb7
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 6 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசி; ஒருவர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 26) நண்பகல் நிலவரப்படி புதிதாக 219 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,955 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 6 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; ஒருவர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் சிங்கப்பூரர்.

50 வயதான அந்த ஆடவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தென்பட்டன. ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் அவருக்குத் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வேலை அனுமதிச்சீட்டு கொண்ட நால்வருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் 35 முதல் 42 வயதுக்குட்பட்ட ஆடவர் என்றும் அவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்பட்டது.

அவர்களில் ஒரு இந்திய நாட்டவரும் ஒரு ஃபிலிப்பீன்ஸ் நாட்டவரும் அத்தியவசியச் சேவைகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளின்போது கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பவர்கள்.

ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்பிலிருந்த ஒரு இந்தியர், ஒரு பங்ளாதேஷ் நாட்டவர் ஆகியோருக்கு தனிமைப்படுத்தலிபோது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று ஏற்படுவது கடந்த வாரத்தில் சராசரியாக 4ஆக குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 7ஆக இருந்தது.

அதே போல, முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த இரு வாரங்களாக 2ஆக இருந்து வருகிறது.

நேற்று மேலும் 305 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 36,593 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்; கிருமித்தொற்று கண்ட, ஆனால் வேறு காரணங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக நீடிக்கிறது.

உலக அளவில் இதுவரை 9.69 மில்லியன் மக்கள் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 490,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்