சிங்கப்பூர் பொதுத் தேர்தல்: தொகுதிகளில் உலா வந்து வாக்கு சேகரிப்பு

சிங்கப்பூரில் எதிர்வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்களது தொகுதிகளில் இன்று வலம் வந்து மக்களைச் சந்தித்து வாக்குகளை சேகரித்தனர்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி:

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், தொடர்பு தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன், திருவாட்டி ஃபூ மீ ஹார் ஆகியோர் தேபான் கார்டன்ஸ் சந்தை மற்றும் உணவு நிலையத்தில் பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தனர்.

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டான் செங் போக் மற்றும் கட்சி உறுப்பினர்கள் புளோக் 726 வெஸ்ட் கோஸ்ட் மார்க்கெட் ஸ்குவேரில் குடியிருப்பாளர்களைச் சந்தித்தனர். டாக்டர் டான் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்ஜுனிட் குழுத்தொகுதி:

பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த திரு லியோன் பெரேரா பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் புளோக் 538ல் உள்ள குடியிருப்பாளர் ஒருவருடன் உரையாடினார். பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், கட்சித் தலைவர் சில்வியா லிம், திரு ஜெரால்டு கியாம், திரு ஃபைசால் மனாப், திரு லியோன் பெரேரா என அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளார்களும் இன்று  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பீஷான் -  தோ பாயா குழுத்தொகுதி

புளோக் 127 லோரோங் 1 தோ பாயோ மற்றும் அதன் அருகில் உள்ள காப்பிக் கடைகளில் இன்று காலை வலம் வந்த சிங்கப்பூர் மக்கள் கட்சியின் (SPP) தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா, 49, தலைமையில் பீஷான் -  தோ பாயா குழுத்தொகுதி வேட்பாளர்கள் வாக்குகள் சேகரித்தனர். கட்சியின் முன்னாள் தலைவர் திருவாட்டி லினா சியாம், 71, உடனிருந்தார்.

தாமும் தம் கணவர் திரு சியாமும் இனி தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று திருவாட்டி லினா குறிப்பிட்டார்.

பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதி

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் டெஸ்மண்ட் லிம் தம் கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்களுடன் பொங்கோலில் இருக்கும் எட்ஜ்ஃபீல்ட் வாக் பகுதியில் வலம் வந்து வாக்குகள் சேகரித்தார்.

மரின் பரேட் குழுத்தொகுதி

நாடாளுமன்ற பேச்சாளர் டான் சுவான் ஜின், மக்கள் செயல் கட்சியின் புதுமுக வேட்பாளர் முகமது ஃபாமி அலிமானுடன் ஹெய்க் ரோடு உணவு நிலையத்தில் இன்று காலை உணவு அருந்தினார். இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃபுக்கு பஹ்டிலாக திரு ஃபாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் டான் சீ லெங்கும் தமது தொகுதியில் காலை உணவு கூட்டத்தில் கலந்துகொண்டார். ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்குக்கு பதிலாக டாக்டர் டான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்பர்சன் தனித்தொகுதி

மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளார் கோ மெங் செங் மெக்பர்சன் தொகுதியில் இன்று காலை தொகுதி உலா வந்தபோது, இதுவே தாம் போட்டியிடும் இறுதித் தேர்தல் என்று குறிப்பிட்டார்.ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் உறுப்பினர்களும் அவருடன் தொகுதி உலாவில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர். அப்போது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் பொதுச் செயலாளார் முகமது ஹமிம் அலியாஸ், இந்தத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் தங்களது கட்சி போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் சக்தி கட்சிக்கும் மெக்பர்சன் தனித்தொகுதியில் போட்டியிடும் திரு கோவுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online