சுடச் சுடச் செய்திகள்

மக்கள் செயல் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு; கொவிட்-19 நெருக்கடியை முறியடிக்க முன்னுரிமை

அடுத்த மாதம் 10ஆம் தேதி பொதுத் தேர்தல். ஆனால் இவ்வாண்டு நடைபெறும் தேர்தல் முன்னைய தேர்தல்களைப் போன்றது அல்ல என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 எனுப்படும் கொரோனா கிருமித்தொற்று உலகைப் புரட்டிப்போட்டு வரும் இவ்வேளையில்  சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முறியடிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மக்கள் செயல் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட பிரதமர் லீ கூறினார்.
“நாம் இவ்வளவு காலம் சாதித்தவற்றை தக்கவைத்துக்கொள்ள இமாலய முயற்சி தேவை. அது இல்லாவிட்டால் அவை தொடர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே. 

“தற்போது சிங்கப்பூர் கடுமையான சவாலை எதிர்கொள்கிறது. இந்தச் சிரமமிக்க காலகட்டத்தை சிங்கப்பூர் எவ்வித சரிவுமின்றி கடக்க வேண்டும். இதுதான் அரசாங்கம் எதிர்கொள்ளும் ஆகக் கடுமையான சவால். இதற்குத்தான் அரசாங்கம் உடனடி முன்னுரிமை வழங்குகிறது,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் சிங்கப்பூருக்கான நீண்டகாலத் திட்டங்களில் கவனம் செலுத்துவது வழக்கம் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரதமர் லீ கூறினார்.

ஆனால் கொரோனா கிருமித்தொற்று உலகமெங்கும் தலைவிரித்தாடும் இக்காலகட்டத்தில் நிலைமை  மாறியிருப்பதை அவர் சுட்டினார். கொரோனா கிருமித்தொற்றை இந்தத் தலைமுறை இதுவரை காணாத ஆக மோசமான நெருக்கடி எனப் பிரதமர் வர்ணித்தார். 

அதை முறியடிப்பதற்கு தற்போதைய தேர்தல் அறிக்கை முன்னுரிமை தருவதாக அவர் கூறினார்.

கொவிட்-19லிருந்து சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் பாதுகாப்பது, சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புச் சேவை கொரோனாவால் முடங்காதபடி பார்த்துக்கொள்வது, பொருளியலை மீண்டும் உயிர்ப்பித்து மாற்றியமைப்பது, நிலையின்மை மற்றும் ஆபத்துமிக்க காலகட்டங்களில் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற விவகாரங்கள் குறித்து வாக்காளர்கள் அக்கறை கொள்வதாக பிரதமர் லீ கூறினார்.

“தேர்தல் அறிக்கையின் கருப்பொருளான ‘நம் வாழ்க்கை, நம் வேலைகள், நம் எதிர்காலம்’ இதற்குப் பதிலளிக்கிறது. கொவிட்-19, வேலைகள் ஆகியவற்றைத் தவிர்த்து கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி முடிவுக்கு வந்ததும் சிங்கப்பூரால் தொடர்ந்து முன்நோக்கிச் செல்ல முடியுமா என்ற கேள்வி சிங்கப்பூரர்களின் மனதில் எழுந்துள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் சிங்கப்பூரின் நிலை குறித்து அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். கொரோனா நெருக்கடியிலிருந்து தப்பிப்பதில் மட்டும் தேர்தல் அறிக்கை கவனம் செலுத்தவில்லை. 

“நாட்டுக்குத் தேவையான நீண்டகால இலக்குகளுக்கும் சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கும் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் கொடுக்கிறது,” என்று பிரதமர் லீ தெரிவித்தார். 

பொறுப்புமிக்க அரசியல் கட்சி, அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையாக அது அமைந்திருப்பதாக பிரதமர் லீ கூறினார்.

“கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் மக்கள் செயல் கட்சி நிறைவேற்றும்,” என்று பிரதமர் லீ உறுதி அளித்தார்.

“இதற்கு முன்பு சிங்கப்பூரர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற அரசாங்கத்தின் பங்கு இந்த அளவுக்கு முக்கியமாக இருந்தததில்லை. இதனால்தான் யாரை நீங்கள் அடுத்த அரசாங்கமாக தேர்ந்தெடுக்கிறீரர்கள் என்பது மிகவும் முக்கியம் என்றார் பிரதமர் லீ.

கட்சிக்காரர்கள் முன்னால் மக்கள் செயல் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது  வழக்கம். 

ஆனால் இம்முறை கொரோனா கிருமித்தொற்று ஆபத்து இருப்பதால் தேர்தல் அறிக்கையை ஃபேஸ்புக் நேரடி ஒளிபரப்பு மூலம் பிரதமர் லீ இன்று வெளியிட்டார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon