'வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முறையில் மசெக நம்பிக்கை'

மக்கள் செயல் கட்சி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தனது நடைமுறையில் நம்பிக்கை கொண்டு இருக்கிறது. தன் வேட்பாளர்கள் அந்தப் பணிக்குப் பொருத்தமானவர்கள்தான் என்று கட்சி நம்பினால் அவர்களைக் கட்சி ஆதரிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். 

“ஏதாவது பிரச்சினை தலைதூக்கினால் அவற்றை நாங்கள் ஆராய்வோம்,” என்றார் திரு லீ. பிரதமர், தான் தலைமை ஏற்கும் அங் மோ கியோ குழுத்தொகுதி வேட்பாளர்களை நேற்று அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

“வேட்பாளர்களுக்கு எதிராக புகார்கள், மனக்குறைகள் எதுவும் இல்லை எனில் அவர்களைக் கட்சி ஆதரிக்கும். தாங்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பது வேட்பாளர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஒளிவுமறைவு இல்லாமல், கட்சிக்கு நேர்மையானவர்களாக வேட்பாளர்  கள் இருக்கும் பட்சத்தில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியும். 

“அப்படிப்பட்டவர்கள் வேட்பாளராக தகுதி பெறுகிறார்கள் என்ற மனநிறைவு நமக்கு ஏற்படும். அத்தகைய நிலையில் வேட்பாளர்களைக் கட்சி ஆதரிக்கும், தற்காக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டார். 

மசெகவின் புதிய வேட்பாளராக ஐவன் லிம், 42, என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் அவருடைய கடந்த கால நடத்தை தொடர்பில் இணையத்தில் புகார்கிளம்பியதை அடுத்து தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் விலகிக்கொண்டார்.  இதன் தொடர்பில் செய்தியாளர்கள் கேட்டபோது பிரதமர் விளக்கம் அளித்தார். 

கட்சி வேட்பாளர்களைக் குறையில்லாத, நிறைவான நடைமுறையின் மூலம் மசெக தேர்ந்தெடுக்கிறது, மதிப்பிடுகிறது, அலசி ஆராய்கிறது என்று கூறிய பிரதமர், இருந்தாலும் எந்தவொரு நடைமுறையும் எந்தவொரு வேட்பாளரும் நூற்றுக்கு நூறு குறையில்லாமல் இருக்க முடியாது என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.