சமூகத்தில் 10 சம்பவங்கள் உட்பட மேலும் 215 பேருக்கு கொவிட்-19; மொத்த எண்ணிக்கை 44,000ஐ கடந்தது

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 1) நண்பகல் நிலவரப்படி புதிதாக 215 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,122 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 10 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் அறுவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; நால்வர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

எண் 20 மார்சிலிங் லேனில் இருக்கும் மார்சிலிங் லேன் சந்தை மற்றும் சமைத்த உணவு நிலையம், 506 தெம்பனிஸ் சென்ட்ரல் 1ல் இருக்கும் ஷெங் சியோங் பேரங்காடி, 201B தெம்பனிஸ் ஸ்திரீட் 21ல் இருக்கும் ‘ஒன் சூப்பர்மார்க்கெட்’, 10 அட்மிரல்டி ஸ்திரீட்டில் இருக்கும் நார்த் லிங்க் கட்டடத்தின் ஷாங் செங் மீ வா கோப்பிக்கடை ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

20 செனொக்கோ கிரசென்டில் உள்ள தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்றுக் குழுமத்தை அமைச்சு அறிவித்தது. 

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 7ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.

ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 4ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.

நேற்று மேலும் 515 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 38,488 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.

அனைத்துலக அளவில் கொவிட்-19ஆல் 10.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 513,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online