கிட்டத்தட்ட 1.2 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களுக்குப் பயனீட்டுக் கட்டண ஆதரவாக மொத்தம் $340 மில்லியன் வழங்கப்படவிருக்கிறது.
குறைந்தது ஒரு சிங்கப்பூரரைக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு 'ஒற்றுமைக்கான பயனீட்டு உதவித்தொகை' என்ற பெயரில் ஒருமுறை மட்டும் $100 மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சு நேற்று ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட வலிமைக்கான வரவுசெலவுத் திட்டத்தின்போது இந்த 'ஒற்றுமைக்கான பயனீட்டு உதவித்தொகை' குறித்து அறிவிக்கப்பட்டது. இந்த மானியத்தொகை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கான பயனீட்டுக் கட்டணக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.
'யு-சேவ்' ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு, 'யு-சேவ்' சிறப்பு வழங்குதொகை ஆகியவற்றுடன், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசித்து வரும் தகுதிபெறும் குடும்பங்களுக்கு இந்தக் கூடுதல் மானியம் கிடைக்க இருக்கிறது.
வீவக வீடுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட 940,000 குடும்பங்கள் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 'யு-சேவ்' சிறப்பு வழங்குதொகை மூலமாக இந்த நிதியாண்டில் இரு மடங்கு 'யு-சேவ்' பற்றுச்சீட்டுகளைப் பெறும்.
இம்மாதத்தில், தங்களது வீட்டின் அளவைப் பொறுத்து, அந்தக் குடும்பங்களுக்கு $300 வரையிலான 'யு-சேவ்' கட்டணக் கழிவு கிடைக்கும் என நிதியமைச்சு கூறி உள்ளது.
ஓரறை, ஈரறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு $300, மூவறை வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு $270, நான்கறை, ஐந்தறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு முறையே $240ம் $210ம் பயனீட்டுக் கட்டணக் கழிவு வழங்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வைத்திருக்கும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறாது.


