ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவிக்கு கொவிட்-19 இல்லை; தவறுதலான அறிவிப்புக்கு மன்னிப்பு கோரிய மருத்துவமனை

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவிக்கு கொவிட்-19 இல்லை; தவறுதலான அறிவிப்புக்கு மன்னிப்பு கோரிய மருத்துவமனை

2 mins read
a1906819-57b9-44ed-84a6-d91cfa607e55
ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றில் பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. ஆனால், பரிசோதனையைக் கையாண்டவர் செய்த தவறு காரணமாக அவருக்கு கிருமித்தொற்று இருப்பதாகத் தெரிவிக்க நேர்ந்ததாகக் குறிப்பிட்ட டான் டோக் செங் மருத்துவமனை, இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோரியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றில் பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பரிசோதனையைக் கையாண்டவர் செய்த தவறு காரணமாக அவருக்கு கிருமித்தொற்று இருப்பதாகத் தெரிவிக்க நேர்ந்ததாகக் குறிப்பிட்ட டான் டோக் செங் மருத்துவமனை, இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பை அடுத்து, பள்ளியில் மாணவர்களுக்கிடையே கிருமித்தொற்று பரவவில்லை என கல்வி அமைச்சின் பள்ளிகளுக்கான இயக்குநர் திருவாட்டி லியூ வெய் லி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அந்தப் பெண்ணுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தால், பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கிடையே, பள்ளியில் ஏற்பட்ட முதல் பரவல் சம்பவமாக அது இருந்திருக்கும்.

ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட 13 வயதுச் சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்ட அந்தப் பெண்ணுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அந்தச் சிறுமி கிருமித்தொற்று கண்ட 45655வது நபர் என்று கூறப்பட்டது.

ஆனால், கொவிட்-19 பாதிப்புக் கண்ட ஒருவருடைய பரிசோதனை மாதிரியின் லேபிள் எண் 45655 என்று தவறுதலாக ஒட்டப்பட்டதால், அந்த மாணவிக்கு கிருமித்தொற்று இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

இதனையடுத்து, அந்த மாணவிக்கு மீண்டும் கிருமித்தொற்று பரிசோதனை செய்ததில் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தவறுதலாக லேபிள் ஒட்டப்பட்ட பரிசோதனை மாதிரி வெளிநாட்டு ஊழியர் ஒருவருடையது என்றும், அவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த மாணவிக்கு கிருமித்தொற்று இருப்பதாகக் கூறப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட, அந்தப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் ஆகியோரின் தனிமைப்படுத்தல் உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டது.

இத்தகைய தவறுகளை மிகவும் கடுமையானதாகக் கருதுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தங்களது ஆய்வகத்தில் பரிசோதனை நடைமுறைகளை தணிக்கை செய்ததாகவும் இத்தகைய தவறு வேறு யாருக்கும் நிகழவில்லை என்றும் குறிப்பிட்ட டான் டோக் செங் மருத்துவமனை, எதிர்காலத்தில் இத்தகைய தவறு நிகழாத வகையில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்