'பள்ளிகளில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டால், தொடர்புடைய சிறிய குழுக்கள் தனிமைப் படுத்தப்படும்'

1 mins read
284f4e7f-ca54-440c-a238-a06584bebf56
இன நல்லிணக்க நாளையொட்டிய தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளியின் நடவடிக்கைகளில் கல்வி அமைச்சர் ஓங் யி காங் இன்று பங்கேற்றார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

பள்ளிகளில் யாருக்காவது கொவிட்-19 உறுதி செய்யப்பட்டால் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மாணவர்கள், பணியாளர்கள் உட்பட சிறிய குழுக்கள் தனிமைப்படுத்தப்படுவதே கல்வி அமைச்சின் அணுகுமுறை என கல்வி அமைச்சர் ஓங் யி காங் இன்று (ஜூலை 16) தெரிவித்தார்.

இன நல்லிணக்க நாளையொட்டி இன்று தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்த திரு ஓங் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே கிருமிப் பரவல் ஏற்பட்டால் அமைச்சு எவ்வாறு அதனைக் கையாளும் என்று கேட்கப்பட்டதற்கு, அந்த நடைமுறை நல்ல முறையில் நிறுவப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

"கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விடுப்பில் வைக்கப்படுவர்," என்றார் அமைச்சர். அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை இயன்ற அளவுக்கு சிறியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவிக்கு கிருமித்தொற்று இருப்பதாக தவறுதலாக உறுதிபடுத்தப்பட்டபோது அந்த மாணவி பயிலும் நிலையில் உள்ள மாணவர்கள் சில நாட்களுக்கு வீட்டிலிருந்தபடியே கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றன. இதனையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

மாறுபட்ட நேரங்களில் உணவு இடைவேளை, வகுப்புகளுக்குச் செல்ல குறிப்பிட்ட பாதையைப் பயன்படுத்துதல் உட்பட பள்ளிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடையிலான தொடர்பு குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்