சட்டைக் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு, புக்கிட் தீமா குடியிருப்பாளர்கள் சுமார் 10 பேர் இன்று காலை கோதாவில் இறங்கினர்.
டோ யி பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக்கு அருகில் சுமார் 1.5 ஹெக்டர் நிலப்பரப்பில் அதிக புசுபுசுவென வளர்ந்திருந்த புல்லை வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு அந்தப் பகுதி மக்கள் வழங்கிய வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்தத் தொண்டூழியப் பணியில் ஈடுபட்டது அந்தக் குழு.
அவர்கள் வேறு யாருமல்ல; நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள ஊழியர் குடியிருப்புக்கு குடிபுகுந்த வெளிநாட்டு ஊழியர்கள் அவர்கள்.
டோ யி டிரைவிலிருந்து சுமார் 5 நிமிட நடைப்பயணத்தில் அடையக்கூடிய கிஸ்மின் அவென்யூ புளோக் 90, 92, 94 ஆகியவற்றில் இரு மாதங்களுக்கு முன்பு தங்க வைக்கப்பட்டனர் ஊழியர்கள்.
அந்தப் பணியில் ஈடுபட்ட 32 வயதான திரு நடேசன் முனியையா இந்தியாவைச் சேர்ந்த ஊழியர். அவர் இங்கு 8 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.
அந்தப் பகுதி குடியிருப்பாளர்களுக்காக இந்த முயற்சியில் ஈடுபட விரும்புவதாக தமது முதலாளி திரு வோ ஹப்பிடம் இது குறித்து தெரிவித்தார் திரு நடேசன். அவரும் ஒப்புதல் அளித்தார்.
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதும் சமுகத்துக்குத் திருப்பிச் செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்றார் திரு நடேசன்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மே மாதத்தில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் சுமார் 1,030 வெளிநாட்டு ஊழியர்கள் இந்த புளோக்குகளில் தங்க வைக்கப்பட்டனர்.
அந்தப் பகுதி குடியிருப்பாளர்கள், இந்த ஊழியர்களுக்கு பராமரிப்புப் பொட்டலங்கள் வழங்கி வரவேற்றதுடன் அவ்வப்போது உணவு உட்பட சில பொருட்களையும் வழங்கினர்.
ஊழியர்களின் இந்த முயற்சியில் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி சிம் ஆன் கலந்துகொண்டார்.
வெளிநாட்டு ஊழியர்களின் நேர்மறை பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.


