உயர்நிலைப் பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் தொடங்க அனுமதி

வரும் 27ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் மற்றும் மில்லெனியா கல்வி நிலையத்தில் குறைந்த அபாயமுடைய இணைப்பாட நடவடிக்கைகளைத் தொடங்கலாம் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் இணைப்பாட நடவடிக்கைகள் பின்னொரு நாளில் தொடங்கப்படும் என்று அமைச்சு கூறியிருக்கிறது.

கடந்த இரு மாதங்களாக பள்ளி நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடங்கப்பட்டு வருவதாகவும் பள்ளிகளில் எல்லா நிலைகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

பல்வேறு பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளுக்கு மாணவர்கள் நன்கு பழகிவிட்டதாகவும் அமைச்சு கூறியது.

விளையாட்டுகளில், விதிமுறைகளில் குறிப்பிட்ட சில மாற்றங்களுடன் அனுமதிக்கப்பட்ட இணைப்பாட நடவடிக்கைகளும் பள்ளி நடவடிக்கைகளும் இடம்பெற வேண்டும் என அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.

ஒரு நடவடிக்கையில் அதிகபட்சம் 20 மாணவர்கள் மட்டுமே பங்குபெற முடியும். சாத்தியம் இருப்பின், மாணவர்கள் தங்களுக்குள் கலந்துறவாடுவது குறைவாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை இடம்பெற வேண்டும். 

ஐந்து பேரையும் அதற்குக் குறைவானோரையும் கொண்ட குழுக்கள் தங்களுக்குள் அணுக்கமாகக் கலந்துறவாட முடியும். 

உடல்ரீதியான நடவடிக்கைகளின்போதும் மாணவர்கள் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி என்ற விதியைப் பின்பற்ற வேண்டும்.

காய்ச்சல், இருமல் போன்ற சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை அறிவதற்காக, பயிற்றுநர்கள் உள்ளிட்ட வருகையாளர்கள் அனைவரையும் பள்ளிகள் தொடர்ந்து பரிசோதிக்கும். அவர்கள் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்கின்றனரா என்பதையும் பள்ளிகள் உறுதிசெய்யும்.