'பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஊழியர்களை முதலில் தனிமைப் படுத்தியதால், விடுதிகளில் கொவிட்-19 உயிரிழப்புகள் குறைவாக உள்ளன'

தங்கும் விடுதிகளில் வசிக்கும் சுமார் 247,000 ஊழியர்கள் கொவிட்-19லிருந்து விடுபட்டதாகவோ அல்லது அவர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்றோ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தினமும் சில நூறு பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

விடுதிகளில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய ஏப்ரல் மாதத்தில், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வயதான, வேறு உடல்நலப் பிரச்சினைகள் உள்ள ஊழியர்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்டதாக தொற்றுநோய்கள் நிபுணர் பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறியுள்ளார்.

நேற்று நடத்தப்பட்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கொவிட்-19 இணையவழி கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதிகளில் நெரிசலான சூழலில் ஊழியர்கள் வசித்தாலும், அவர்களிடையே மரண எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருக்க இந்த அணுகுமுறை உதவியது என்றார் அவர்.

உலக நாடுகளில், கொரோனா தொற்றால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்துவரும் வேளையில், சிங்கப்பூரில் இதுவரை 27 பேர் உயிரிழந்தது பிற நாடுகளை வியக்க வைத்திருக்கிறது.

கிருமித்தொற்று பரவலைவிட, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு சிங்கப்பூர் வலுவான முன்னுரிமை அளித்தது என்றார் பேராசிரியர் ஃபிஷர்.

உலக சுகாதர நிறுவனத்தின் அனைத்துலக நோய்ப்பரவல் எச்சரிக்கை மற்றும் நடவடிக்கைக் கட்டமைப்பு செயற்குழுவிற்குத் தலைவராகவும் இருக்கிறார் பேராசிரியர் ஃபிஷர்.

நேற்றைய நிலவரப்படி விடுதிகளில் வசிக்கும் 341 ஊழியர்களுக்குப் புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆனால், ஏப்ரல் 20 அன்று ஆக அதிகமாக ஒரே நாளில் 1,369 ஊழியர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.