பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்கும் துணைப் பிரதமர் ஹெங்

பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.

இந்தத் தகவலை, புதிய அமைச்சரவை பற்றி இன்று (ஜூலை 25) அறிவித்த பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

அந்தப் பொறுப்புக்கான பணிகளை திரு ஹெங் ஏற்கெனவே ஆற்றி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நியமனம் ஏற்கெனவே இருக்கும் ஏற்பாடுகளை விதிமுறைப்படுத்தியுள்ளது என்றார்.

FEC எனப்படும் எதிர்கால பொருளியல் மன்றம், தேசிய ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுக்குத் தலைவராக இருக்கிறார் திரு ஹெங். பிரதமர் அலுவலகத்தில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைக்கும் உத்திபூர்வ குழுவை மேற்பார்வையிடும் திரு ஹெங் அந்தப் பணியைத் தொடர்வார் என்றார் திரு லீ.

நிதி அமைச்சரான திரு ஹெங், நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதால், நமது முக்கிய முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் பற்றி அவருக்கு விரிவான கண்ணோட்டம் இருக்கும் என்றார் திரு லீ.

நிதி அமைச்சு குழுவின் அமைச்சராக திரு ஹெங்கும், இரண்டாம் அமைச்சர்களாக திரு லாரன்ஸ் வோங்கும் குமாரி இந்திராணி ராஜாவும் தொடர்கின்றனர்.

சிங்கப்பூரின் நான்காம் தலைமுறைத் தலைவர்களின் தலைமையை ஏற்கும் திரு ஹெங் 2011ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது முழு அமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

அவர் முதலில் கல்வி அமைச்சராக இருந்தார். கடந்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.