சீன புலனாய்வுத் துறைக்காக அமெரிக்காவில் ரகசிய தவல்களைத் திரட்டியதாக ஒப்புக்கொண்ட சிங்கப்பூரர்

சீன புலனாய்வுத்துறை அதிகாரிகளின் வழிநடத்துதலின்படி, அமெரிக்கர்களிடமிருந்து ரகசியத் தகவல்களைப் பெற்று வேவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் ஒப்புக்கொண்டார் என அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது.

டிக்சன் இயோ என்றும் அழைக்கப்படும் ஈயோ ஜுன் வெய் எனும் அந்த ஆடவர், அமெரிக்காவில் சட்டவிரோத வெளிநாட்டு உளவாளியாக இருந்ததாக வாஷிங்டன் டிசியில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவில் அவர் நடத்திய அரசியல் ஆலோசனை அமைப்பை, சீன புலனாய்வுத்துறை கோரிய தகவல்களைத் திரட்டுவதற்குப் பயன்படுத்தினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. அமெரிக்க ராணுவம், சமூக ஊடகங்களின் நிபுணத்துவ கட்டமைப்புகளின் பாதுகாப்புச் சோதனைகளுடன் கூடிய அரசாங்க ஊழியர்கள் ஆகியோர் தொடர்பான தகவல்கள் அவை.

ஆசியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதற்காக என்று குறிப்பிட்டு, அந்த அதிகாரிகளிடம் அறிக்கைகள் எழுதக் கோரும் இயோ,  அதற்கு அவர்களுக்குப் பணம் கொடுத்து வந்தார். ஆனால், அந்த அதிகாரிகளுக்குத் தெரியாமல் அவ்வறிக்கைகள் உண்மையில் சீனாவுக்கு அனுப்பப்பட்டன.

கடந்த 2015ஆம் ஆண்டு லீ குவான் இயோ பொதுக்கொள்கைப் பள்ளியில் முனைவர் பட்டக்கல்வி மாணவராக இயோ பதிவு செய்திருந்தார். அப்போது அவர் சீனா தொடர்பிலான ஆய்வை மேற்கொண்டதாக பள்ளியின் இணையப்பக்கம் தெரிவித்தது.

தாம் சீன புலனாய்வுத் துறைக்குப் பணியாற்றியது தமக்குத் தெரியும் என்றும் தாம் சீனாவுகுச் சென்றபோதெல்லாம் நல்ல முறையில் நடத்தப்பட்டதாகவும் இயோ ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் வர்த்தகத் துறை, செயற்கை நுண்ணறிவு, அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் போன்ற முக்கிய தகவல்களை சேகரிக்குமாறு இயோவிடம் கோரிய அவரது சீனத் தொடர்புகள், இயோவை அமெரிக்காவில்   ஓர் ஆலோசனை நிறுவனமும் தொடங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி இயோ நடந்துகொண்டார்.

அமெரிக்க ராணுவ அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் என 400க்கும் மேற்பட்டவர்களின் சுயவிவரங்களைச் சேகரித்து, இயோ தமது சீனத் தொடர்புகளிடம் வழங்கினார் என்று கூறப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் அவர் வாஷிங்டன் டிசிக்கு குடிபெயர்ந்தார். அங்கு இன்னும் அதிக எண்ணிக்கையிலானோரின் தகவல்களைத் திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டார்.

பென்டகனில் பணிபுரியும் ஒரு ராணுவ அதிகாரியிடமிருந்து மிக முக்கியமான ரகசியத் தகவலைப் பெறும் நோக்கில், கடந்த நவம்பரில் இயோ அமெரிக்காவுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் இருக்கும்போது அவர் சீன அதிகாரிகளுடன் பேசமாட்டார் எனவும் சீன அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளும்போது ‘விசாட்’ செயலி மூலம் பல்வேறு கைபேசிகளை இயோ பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

இயோ 19918 - 99 காலகட்டத்தில் சிங்கப்பூரின் தேசிய தொடக்கக்கல்லூரியில் பயின்றதாகவும் பின்னர் ஒக்லஹோமா சிட்டி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2100 வரை முதுகலைப் பட்டப்படிப்பும் மேற்கொண்டார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.