இரண்டாம் காலாண்டில் இரட்டிப்பான வேலையிழப்புகள்; வேலையின்மையும் வெகுவாக அதிகரித்தது

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், கொவிட்-19 தாக்கம் வேலைச்சந்தையில் எதிரொலித்ததன் விளைவாக வேலையின்மையும், வேலையிழப்புகளும் வெகுவாக அதிகரித்தன.

இல்லப் பணிப்பெண்களைத் தவிர, சிங்கப்பூரில் வேலையில் இருப்போரின் எண்ணிக்கையில் 121,800 இரண்டாம் காலாண்டில் குறைந்தது. இந்தத் தகவல்களை மனிதவள அமைச்சு இன்று (ஜூலை 29) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 147,500 வேலைகள் குறைந்தன.  முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் நான்கு மடங்கு வேலைகள் குறைந்தன.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் 3,220 பேர் வேலைகளை இழந்தனர். இரண்டாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 6,700 ஆனது. முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.

2003ஆம் ஆண்டில் சார்ஸ் நோய்ப் பரவல் காரணமாக 5,510 வேலையிழந்தனர்; 2009ஆம் ஆண்டில் உலகப் பொருளியல் நெருக்கடி காரணமாக 12,760 வேலையிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலாண்டில் மொத்த வர்த்தகம், போக்குவரத்து சாதனங்கள் போன்றவற்றில் வேலையிழப்புகள் அதிகம் இருந்தன.

இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 79,600 ஆக உயர்ந்தது. நிரந்தரவாசிகளையும் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 90,500. கடந்த மார்ச் மாதத்தில் 76,200 குடியிருப்பாளர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இதன் காரணமாக, மார்ச் மாதத்தில் 3.5 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம், ஜூன் மாதத்தில் 4 விழுக்காடாக உயர்ந்தது.

மார்ச் மாதத்தில் 3.3 விழுக்காடாக இருந்த குடியிருப்பாளர்களின் வேலையின்மை விகிதம், ஜூன் மாதத்தில் 3.9 விழுக்காடாக உயர்ந்தது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் இருந்த 2.4லிருந்து ஜூன் மாதத்தில் 2.9 விழுக்காடாக உயர்ந்தது.

தொடரும் பயணக் கட்டுப்பாடுகள், பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள், தொழில்துறைகளின் நிச்சயமற்ற போக்கு ஆகிய காரணங்களால் இவ்வாண்டிறுதி வரை வேலையிழப்புகளும் வேலையின்மையும் அதிகரிக்கக்கூடும் என்று என்டியுசி துணை பொதுச் செயலாளர் பேட்ரிக் டே இன்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.