மேலும் 95 ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 இல்லை

மேலும் 95 தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இல்லை என்று இன்று (ஜூலை 29)  அறிவிக்கப் பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட விடுதி ஒன்று, தொழிற்சாலைகளாக இருந்து தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட 78 தங்கும் விடுதிகள், கட்டுமான ஊழியர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள 16 விடுதிகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

மேலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆறு தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 12 கட்டடங்களிலும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த 12 கட்டடங்களில் ஒன்று கியேன் டெக் தங்கும் விடுதியைச் சேர்ந்தது. இந்தக் கட்டடத்தில் இருப்பவர்கள் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து கியேன் டெக் தங்கும் விடுதியில் கொவிட்-19 பாதிப்பு முழுமையாக நீங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் 975 தங்கும் விடுதிகளிலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட 17 விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 64 கட்டடங்களிலும் இனி கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நிலவரப்படி கிட்டத்தட்ட 262,000 வெளிநாட்டு ஊழியர்கள் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாகவும் அல்லது கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.

எஞ்சியிருக்கும் தங்கும் விடுதிகளையும் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களாக்க  விடுதிகளை நடத்தும் நிறுவனங்களுடனும் ஊழியர்களின் முதலாளிகளுடனும்  வெளிநாட்டு ஊழியர்களுடனும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மிக அணுக்கமாக செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பாதிப்பு இல்லாத தங்கும் விடுதிகளையும் அடுத்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத விடுதிகளாக அறிவிக்கப்பட இருக்கும் விடுதிகளையும் கொண்ட பட்டியலைக் காண முதலாளிகள் மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தை நாடலாம்.