சிங்கப்பூரில் உள்ள அனைத்து விடுதிகளும் கொவிட்-19லிருந்து விடுபட்டிருப்பதாக இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்படுள்ளது. தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட புளோக்குகளும் இதில் அடக்கம்.
தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட புளோக்குகளில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்திருப்பவர்கள் அல்லது அவர்களது உடல் நலனைப் பொறுத்து, மற்ற அரசாங்க வசதிகளுக்கு மாற்றப்பட்டவர்கள் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
கட்டுமானம், கடல்துறை, பதனீடு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 86% ஊழியர்கள் அதாவது சுமார் 333,000 ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 81 விழுக்காட்டினர் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அண்மையில் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்ட விடுதிவாசிகள் சுமார்20,000 பேருக்கு விரைவில் Green AccessCode வழங்கப்பட்டு அவர்கள் பணிக்குத் திரும்புவர் எனவும் அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் Red AccessCode வைத்திருப்பவர்கள். அவர்களது முகவரி பற்றிய விவரங்கள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்றும் விடுதி நிர்வாகிகளுக்கும் முதலாளிகளுக்கும் அது குறித்த நினைவூட்டல்கள் அனுப்பப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
இனிவரும் காலங்களில் சில ஊழியர்களுக்கு Red AccessCode இருக்கும் என்றும் அவர்கள் பணிக்குச் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்தது. கொவிட்-19 தொற்று ஏற்படுவது, தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்படுவது, டிரேஸ்டுகெதர் செயலியை கைபேசியில் பதிவிறக்காமலிருப்பது, கேட்டுக்கொள்ளப்பட்டும் பரிசோதனைக்குச் செல்லாதது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தபப்டுவது உள்ளிட்ட பல காரணங்கள் அதற்கு இருக்கலாம்.
கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்ட விடுதிகளில் இரண்டாம் அலை கிருமித்தொற்று ஏற்படுவதைத் தடுக்க, பல அடுக்கு உத்திமுறை பயன்படுத்தப்படும் என்று மனித வள அமைச்சு தெரிவித்தது. பணியாற்றும் துறைகளுக்கேற்ப ஊழியர்கள் பிரிக்கப்படுவதுடன், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும்.
ஊழியர்களுக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டால், அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல் வளாகங்களுக்கு அனுப்பப்படுவர்; நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அறியப்படும் மற்றவர்கள் விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் வளாகங்களில் தங்கவைக்கப்பட்டு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

