கொரோனா கிருமி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், சிங்கப்பூரில் அது பெரியளவில் கிடைக்கும் சாத்தியம் குறைவு. எனவே, இங்கு அதை எந்தப் பிரிவினருக்கு விநியோகம் செய்வது என்பதில் அதிகாரிகள் முன்னுரிமை அளிக்க வேண்டியிருக்கலாம் என்று சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைப் பிரிவு இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்க அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் நேற்று (ஆகஸ்ட் 21) பேசிய இணைப் பேராசிரியர் மாக், தடுப்பு மருந்தைக் கட்டாயமாக்குவது குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார்.
ஆனால், தடுப்பு மருந்து முதன்முறையாக கிடைக்கும்போது அது சிறிய அளவில் மட்டும் கிடைக்கக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.
"ஏராளமான நாடுகள் தடுப்பு மருந்தைப் பெற விரும்பும். தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் நிறுவனங்கள், எத்தனை நாடுகளுக்கு முடியுமோ அத்தனை நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் விவரித்தார்.
எனவே, தடுப்பு மருந்து விநியோகிக்கப்படும் ஆரம்பகட்டத்தில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.
கொவிட்-19 நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் நோய்த்தொற்று கண்டவர்களைப் பராமரிக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படக்கூடும் என்றார் இணைப் பேராசிரியர் மாக்.
ரகசியத்தன்மை காரணமாக, தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பில் எந்தெந்த நாடுகள் அல்லது நிறுவனங்களுடன் சிங்கப்பூர் ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறித்த மேல் விவரங்களைத் தம்மால் வெளியிட முடியாது என்று அவர் சொன்னார்.


