வெளிநாட்டு ஊழியர்களுக்காக எதிர்பாராவிதத்தில் அதிக மருத்துவச் செலவு ஏற்படும்போது அவற்றை நிறுவனங்கள் சமாளிக்க உதவும் வகையில் காப்புறுதி செயல்திட்டம் ஒன்று உருவாக்கப்படும். மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று இதனை அறிவித்தார்.
ஊழியர்களுக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் வலுவான மருத்துவ ஆதரவு முறை உருவாக்கப்படும் என்ற போதிலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இடம்பெறக் கூடிய உயர் தரங்களுக்கு ஆகும் செலவை பகிர்ந்துகொள்ளும் ஏற்பாட்டை மிகவும் கவனமாக மனிதவள அமைச்சு ஆராயும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழியர்களின் நலனையும் நல்வாழ்வையும் பாதுகாப்பது முக்கியம். அதேவேளையில், அதிக செலவுகள் நமக்கு கட்டுப்படியாக வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று தன் அமைச்சின் பிற்சேர்க்கையில் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
கொவிட்-19 காரணமாக ஒவ்வொருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மனஉளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் ஊழியர் அணியின் நல்வாழ்வில் அமைச்சு ஒருமித்த கவனத்தைச் செலுத்தவிருக்கிறது. இந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக இவை இடம்பெறும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழிற்சங்கங்கள், தொழில் சபைகள், அரசு சாரா அமைப்புகள், நிபுணத்துவ அமைப்புகள் ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு எல்லா ஊழியர்களுக்கும் இன்னும் சிறந்த ஆதரவு கட்டமைப்பை அமைச்சு உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளத்தை அதிகப்படுத்த அமைச்சு முன்னுரிமை வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊழியர் அணி மற்றும் முதியோர் ஆதரவுத் திட்டங்களை அவ்வப்போது மறுபரிசீலனை செய்து வருவது, வேலை, வாழ்க்கை நல்லிணக்கம் பற்றிய குடிமக்கள் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது முதலானவை இந்த அமைச்சின் செயல்திட்டங்களில் அடங்கும் என்றும் அமைச்சர் திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.

