நிதித்துறையில் உயர்பதவி வகிக்கும் சிங்கப்பூர் குடிமக்களின் எண்ணிக்கை 50%க்கு மேல் கூடியது

நிதித் துறையில் உயர்பதவிகளை வகிக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் கடந்த ஆண்டில் 50 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்தது என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டில், நிர்வாக இயக்குநர் மற்றும் அதற்கும் மேலான உயர்பதவிகளில் 1,700 சிங்கப்பூரர்கள் இருந்தனர். 2019ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2,600ஆக உயர்ந்துவிட்டது என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் அதிபர் உரை மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்று சிங்கப்பூர் நாணய ஆணைய இயக்குநரவை உறுப்பினருமான திரு ஓங் இதனைத் தெரிவித்தார்.

நிதித் துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில் திரு ஓங் அதற்கு விளக்கமளித்தார்.

நாணய ஆணைய மதிப்பீடுகளின்படி 2014ல் 3,900ஆக இருந்த நிதிச் சேவைகள் துறை உயர் பதவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 5,900ஆக அதிகரித்துவிட்டதாக அவர் சொன்னார்.

இந்நிலையில், அத்துறையில் உயர்பதவிகளில் இருக்கும் சிங்கப்பூரர்களின் விகிதம் 44% என சீராக இருந்து வருவதாகவும் உண்மையில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நிதி மையமாக சிங்கப்பூர் வளர்ச்சி கண்டுள்ளதே இதற்குக் காரணம் என்றார் அவர்.

கடந்த ஆண்டில், சில்லறை வங்கிகளின் உள்ளூர் செயல்பாடுகளுக்கான மூத்த நிர்வாகப் பொறுப்புகளில் ஏறக்குறைய 70 விழுக்காட்டை சிங்கப்பூரர்களே வகித்து வந்தனர் என்றும் வட்டார, அனைத்துலகச் செயல்பாடுகள் அதிகமாக உள்ள மற்ற வங்கிகளில் அவ்விகிதம் ஏறக்குறைய 40% எனக் குறைவாக இருந்தது என்றும் திரு ஓங் தெரிவித்தார்.

நிதித் துறையில் பாரபட்சமான ஆள்சேர்ப்பு நடைமுறைகளுக்கு இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“சிங்கப்பூர் நாணய ஆணையம், நமது நிதி நிறுவனங்களை உயர்ந்த தரமுடையவையாக வைத்திருக்கிறது. நியாயமான ஆள்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளாத நிறுவனங்களை அது ஒருபோதும் பொறுத்தருளாது,” என்றார் அமைச்சர் ஓங்.

நிதி நிறுவனங்களின் தொழில்நுட்பப் பிரிவுகளில் ஒரே நாட்டவரே குவிகின்றனர் என்ற கவலையும் எழுந்தது.

இதற்கு விளக்கமளித்த அமைச்சர், அத்தகைய நிபுணர்களுக்கு மிக அதிகமான தேவை இருக்கிறது என்றும் உள்ளூர்வாசிகளைக் கொண்டு அப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய இயலாது என்றும் சொன்னார்.

பணியிடைக்கால திறன் மேம்பாடு, பல்கலைக்கழகங்களில் கணினி அறிவியல் படிப்புக்கான இடங்கள் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலமாக உள்ளூர் திறனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வந்தாலும் அது நிதித்துறை தொழில்நுட்பப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை என்றும் திரு ஓங் விளக்கினார்.

இருப்பினும், ஒரே நாட்டினரை அதிகமாகச் சார்ந்திருப்பது எதிர்பாராத தருணங்களில் சிங்கப்பூரை எளிதில் பாதித்துவிடக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தகுதி, திறமை அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைமுறைகள் இடம்பெறுவதையும் பணியிடத்தில் பன்முகத்தன்மையை ஆதரிப்பதையும் கட்டிக்காக்கும் வகையில், முக்கிய நிதி நிறுவனங்களின் தலைமைத்துவத்துடனான ஈடுபாடுகளை நாணய ஆணையம் அதிகரித்துள்ளது,” என்றார் அமைச்சர்.

சிங்கப்பூர் பொருளியலில் 13% பங்கைக் கொண்டுள்ள நிதிச் சேவைகள் துறையில் ஏறத்தாழ 171,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள், 14 விழுக்காட்டினர் நிரந்தரவாசிகள்; எஞ்சியோர் வேலை அனுமதி அட்டை பெற்றுள்ளவர்கள்.

உயர்பதவிகளில் சிங்கப்பூரர்கள் 4‌4 விழுக்காடும் நிரந்தரவாசிகள் 20 விழுக்காடும், வெளிநாட்டவர்கள் 36 விழுக்காடும் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு ஓங், இவ்விகிதம் அண்மைய ஆண்டுகளில் சீராக இருந்து வருவதையும் சுட்டினார்.

44% என்பது குறைந்த விகிதமாக இருக்கலாம் என ஒப்புக் கொண்ட அவர், வெளிநாட்டவர்கள் அதிகளவில் உயர்பதவிகளை வகிப்பதற்கு நிதி மையமாகத் திகழும் சிங்கப்பூரிலிருந்து அதிகளவில் அனைத்துலக நடவடிக்கைகள் இடம்பெறுவதே முக்கிய காரணம் என்றார்.

“இது பொறாமைப்படத்தக்க ஒரு நிலை. இது நாட்டிற்கு நல்லதா என சிங்கப்பூரர்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள் ‘ஆம்’ என்றே பதிலுரைப்பர் என்பது என் எண்ணம். இந்தச் செயல்பாடுகள், இவ்வட்டாரத்தின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். சிங்கப்பூருக்கு வாய்ப்புகளையும் வேலைகளையும் அது கொண்டுவரும்,” என்றார் அமைச்சர் ஓங்.

வெளிநாடுகளிலும் நிதித் துறையில் ஏராளமான சிங்கப்பூரர்கள் பணியாற்றி வருவதாக திரு ஓங் கூறினார். அத்தகைய 1,200 சிங்கப்பூரர்களுடன் நாணய ஆணையமும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களில் 750 பேர், இயக்குநர், துணைத் தலைவர் போன்ற உயர்பதவிகளை வகிப்பதாகவும் அவர் சொன்னார்.

ஆயினும், சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர இன்னும் அதிகம் செய்ய முடியும் என்றார் அவர். நிதித்துறையில் தலைவர்களாகவும் நிபுணர்களாகவும் சிங்கப்பூரர்களை வளர்த்து எடுக்க, நாணய ஆணையம் பல்வேறு திட்டங்களின் மூலமாக நிதித்துறையுடன் இணைந்து பணி ஆற்றி வருவதாக அவர் கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் நிதித்துறையில் ஏறத்தாழ 22,000 வேலைகள் உருவாக்கப்பட்டன என்றும் அவற்றில் 15,000 வேலைகள் சிங்கப்பூரர்களுக்குக் கிட்டின என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!