எம்பிளாய்மண்ட் பாஸில் வேலை செய்யக் கூடிய உயர்மட்ட வெளிநாட்டு நிபுணர்களுக்கான ஒதுக்கீட்டு முறை என்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றல்ல என்றும் அது விவேகத்திற்குரிய செயலாக இருக்காது என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்து உள்ளார்.
"காலப்போக்கில் உள்ளூர் பணியாளர்களின் நிலையை உயர்த்த கடப்பாட்டு கொண்டுள்ள நிறுவனங்கள் சரியான தகுதி நிறைந்த வெளிநாட்டு நிபுணர்களைத் தேர்ந்தெடுக்க ஒதுக்கீட்டு முறையைக் காட்டிலும் சம்பளத் தகுதி முறையைப் பின்பற்றுவதே சிறந்ததாக இருக்கும்.
"அதுபோன்ற நீக்குப்போக்கு இல்லாவிட்டால் தலைசிறந்த முதலீடுகள் பலவற்றை நமது போட்டியாளர்கள் இழந்திருப்பார்கள். அதன் தொடர்பிலான வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டு இருக்கும்.
"அதிநவீன முதலீடுகளை ஈர்க்கவும் நவீனமய நடவடிக்கைகள் சிங்கப்பூருக்குள் வரவும் நமது பொருளியல் அமைப்புகளுக்கும் அத்தகைய நீக்குப்போக்கு அவசியம்," என்றார் அவர்.
அதிபர் உரை மீதான விவாதத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
"வெளிநாட்டு ஊழியரணியை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தி வரும் அதேநேரம் பிஎம்இடி என்று அழைக்கக்கூடிய நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்கள் துறையில் சிங்கப்பூரர்களுக்கான ஆதரவு முயற்சிகளிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
"குறிப்பாக, 40 வயதுகளிலும் 50வயதுகளிலும் உள்ள சிங்கப்பூர்களை அத்துைறயின்பால் ஈர்க்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுகிறது," என்று திருவாட்டி டியோ விளக்கினார்.
எம்பிளாய்மண்ட் பாஸில் வேலை செய்ய வெவ்வேறு சம்பள அளவு, வெவ்வேறு துறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல அடுக்குகளைக் கொண்ட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தலாம் என்றும் நிறுவனங்களின் எம்பிளாய்மண்ட் பாஸ் ஊழியர்களின் பங்கை அதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் நேற்று முன்தினம் மன்ற உறுப்பினர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர்.
பைனியர் தனித்தொகுதி உறுப்பினர் பேட்ரிக் டே, வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் ஃபூ மீ ஹார் ஆகியோர் அந்த பரிந்துரைகளை மன்றத்தில் செய்திருந்தனர்.
அதற்கு நேற்று விளக்கமளித்த அமைச்சர் டியோ, வொர்க் பெர்மிட் மட்டத்திலான முறை பற்றிக் குறிப்பிட்டார்.
"ஊழியர்களின் எண்ணிக்கை பெரிது என்பதால் தேவையை முறைப்படுத்த ஒதுக்கீட்டு முறைக்கும் மேல் வெளிநாட்டு ஊழியர் தீர்வை முறையை மனிதவள அமைச்சு பயன்படுத்துகிறது.
"மாதம் குைறந்தபட்சம் $2,400 சம்பளம் பெறக்கூடிய எஸ் பாஸ் முறையிலும் வெளிநாட்டினருக்கு ஒதுக்கீட்டு முறை உள்ளது.
"ஆனால், எம்பிளாய்மண்ட் பாஸ் ஊழியர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்குப் பெரிதல்ல என்பதால் அந்த அம்சத்தில் தரம் முறைப்
படுத்தப்படுவதை அமைச்சு முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.
"கடந்த ஜூன் மாத நிலவரப்படி எம்பிளாய்மண்ட் பாஸில் வேலை செய்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 190,000," என்று அமைச்சர் தெரிவித்தார்.
எம்பிளாய்மண்ட் பாஸில் வேலை செய்ய நேற்று முதல் புதிதாக விண்ணப்பம் செய்வோருக்குரிய குறைந்தபட்ச மாதச் சம்பள வரம்பு $3,900லிருந்து $4,500 ஆக அதிகரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தங்களது எம்பிளாய்மண்ட் பாஸை புதுப்பிப்போருக்கு இந்த முறை பொருந்தும்.

