பணிக்கு அமர்த்தும் ஒவ்வோர் உள்ளூர் ஊழியருக்கும் $30,000 வரை நிறுவனங்கள் பெறலாம்

பணிக்கு அமர்த்தும் ஒவ்வோர் உள்ளூர் ஊழியருக்கும் $30,000 வரை நிறுவனங்கள் பெறலாம்

2 mins read
c48cd13a-0cfd-4dfb-9e79-9897b07883d6
வேலை வளர்ச்சி ஊக்கத்தொகை திட்டத்துக்குத் தகுதி பெற நிறுவனங்கள், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தங்களது உள்ளூர் ஊழியரணியை இந்த மாதத்துக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கும் உள்ளாக அதிகரிக்க வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு $1 பில்லியன் மதிப்பிலான வேலை வளர்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்கு, 40 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்தினால் $15,000 வரையும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைப் பணியமர்த்தினால் $30,000 வரையும் நிறுவனங்கள் பெற முடியும்.

மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (Iras) ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றன. நிறுவனங்கள் மாதந்தோறும் மத்திய சேமநிதிக்குச் செலுத்தும் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, வரும் மார்ச் மாதம் முதல் 12 மாதங்களுக்கு அந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும் ஊழியர்கள் பணியிலிருந்து விலகினால், வழங்குதொகையும் குறையும்.

அதாவது, 40 வயதுக்குட்பட்ட உள்ளூர் ஊழியர்களைப் பணிக்கமர்த்தினால் முதல் 12 மாதங்களுக்கு, ஊழியர் பெறும் முதல் $5,000 மொத்த மாத வருமானத்தில் 25 விழுக்காட்டை அரசாங்கம் சேர்ந்து செலுத்தும். அந்த ஊழியர் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், 50%ஐ அரசாங்கம் சேர்ந்து செலுத்தும்.

வேலை வளர்ச்சி ஊக்கத்தொகை திட்டத்துக்குத் தகுதி பெற நிறுவனங்கள், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தங்களது உள்ளூர் ஊழியரணியை இந்த மாதத்துக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கும் உள்ளாக அதிகரிக்க வேண்டும்.

குறைந்தபட்ச மாதாந்திர ஊதியம் $1,400 வழங்கும் வேலைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். கடந்த மாதம் 16ஆம் தேதிக்கு முன்னதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.

உள்ளூர் ஊழியர்களைப் பணிக்கமர்த்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த மாதம் இந்தத் திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வேலை ஆதரவுத் திட்டம் நடப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்