சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு 17,000 பேர் திரும்பினர்; இன்னும் 15,000 பேர் காத்திருப்பு

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு 17,000 பேர் திரும்பினர்; இன்னும் 15,000 பேர் காத்திருப்பு

2 mins read
74e5adc7-98fe-49dc-8937-03496888bdfb
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா தொற்றுப் பரவல் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது என்பது உண்மைதான் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த திரு ராஜ்.

45 வயதான அவர், சிங்கப்பூரில் 15 ஆண்டுகள் கட்டுமான இயந்திர செயற்பாட்டாளராகப் பணியாற்றினார்; கடந்த ஜூலையில் தமிழகத்துத் திரும்பினார்.

வேலையின்மையால் தவிக்கும் இந்தியர்களிடையே, வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் இவ்வேளையில், விவசாயியான அவர், வருமானமின்றி கடன் தொல்லை அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார். "தங்கும் விடுதியில் மற்றவர்களிடமிருந்து கொரோனா தொற்றிவிடுமோ," என்ற அச்சத்தில் ஊருக்குச் சென்றார். ஆனால், இப்போது, "எப்படியாவது மீண்டும் சிங்கப்பூரில் வேலையில் சேர்ந்துவிட வேண்டும்," என்கிறார்.

ஆனால், மீண்டும் வேலை பெறுவது அவ்வளவு எளிதானதல்ல; முகவர்களுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது.

அப்படியே வேலைகிடைத்தாலும் விமானச் சீட்டுக்கான செலவு, ஆவணங்கள் தொடர்பான செலவு, இங்கு வந்த பிறகு எச்சில்/சளி மாதிரி சோதனை, தனிமைப்படுத்தலுக்கான செலவு என கணிசமான தொகையைச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

நிறுவனம் மூடப்பட்டதையடுத்து வேலையிழந்த மற்றோர் ஊழியரான திரு கிருஷ்ணன் ஹரிஹரசுதனுக்கு இங்கு மற்றொரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது; ஆனால், வேறு நிறுவனத்துக்கு மாற முந்தைய நிறுவனம் அனுமதிக்காத நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இங்கேயே தங்கி வேறு வேலையைத் தேட பலர் விரும்பினாலும் அத்தகைய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

வேலையின்மை மட்டுமின்றி, கொரோனா அச்சத்தாலும் பலர் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினர்.

கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 17,000 இந்தியர்கள் 115 மீட்பு விமானங்களில் தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் 15,000 பேர் நாடு திரும்ப காத்திருப்பதாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

தாயகம் திரும்பியவர்களில் பெரும்பாலானவர்கள் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வர்கள்.

சென்ற ஐந்து மாதங்களில் பல்வேறு நாடுகளில் உள்ள 2.5 மி. தமிழர்களில் சுமார் 300,000 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர்.

அதேபோல, வெளிநாடுகளில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த சுமார் 500,000 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தாலும் அவர்களில் இதுவரை 254,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ளனர். இவ்வாண்டு டிசம்பர் வரை இன்னும் பலர் கேரளாவுக்குத் திரும்புவர் என்று கூறப்படுகிறது.

அதேபோல, சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிய பங்ளாதேஷ் ஊழியர்களும் அங்கு வேலைவாய்ப்புகளின்றி சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் முதல், பல்வேறு நாடுகளிலிருந்து 95,000 பங்ளாதேஷை சேர்ந்த ஊழியர்கள் தாயகம் திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்