காலில் காயத்துடன் பாரந்தூக்கியில் இருந்து இறங்க முடியாமல் தவித்த கட்டுமான ஊழியர் மீட்பு

2 mins read
12e7b42c-e45a-43db-b0ea-76f8f11c966c
தூக்குப் படுக்கையில் படுக்க வைத்து ஊழியரை பத்திரமாக மீட்டது எஸ்சிடிஎஃப் மீட்புக் குழு. படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பக்கக் காணொளியிலிருந்து. -

'டவர் கிரேன்' எனப்படும் கோபுர பாரந்தூக்கியில், தரையிலிருந்து சுமார் 40 மீட்டர் உயரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, காலில் காயம் ஏற்பட்டதையடுத்து, கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார் கட்டுமான ஊழியர் ஒருவர்.

ஹவ் சன் டிரைவ் கட்டுமானத் தளத்தில் நேற்று மாலை 4.25 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள், 'டார்ட்' எனப்படும் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து சென்று, அவரை பத்திரமாக மீட்டனர்.

ஏணி ஒன்றின் மூலம் பாரந்தூக்கியில் ஏறி, பின்னர் குறுகலான கம்பியின் வழி நடந்து சென்ற மீட்புக் குழுவினர் நால்வர், அவரை மீட்டதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இந்த மீட்புப் பணியில் கயிறு, புல்லி போன்றவற்றைக் கொண்டு கீழே இறங்குவதற்கான தடம் ஒன்றை மீட்புப் படையினர் உருவாக்கினர். மீட்புக் குழுவினரில் ஒருவர், அந்த ஊழியரின் காயத்துக்கு, பாரந்தூக்கியில் இருந்தபோதே சிகிச்சை அளித்தார்.

கீழே இந்த மீட்புப்படை வீரர்கள் தயாரித்த தூக்குப்படுக்கை கிரேனுக்கு கயிறு மூலம் அனுப்பப்பட்டது. அதில் அந்த ஊழியரைப் படுக்கவைத்து, பாதுகாப்பாகக் கட்டினர். மீட்புப் படை வீரர் ஒருவர் அந்த ஊழியருடன் இருந்த படுக்கையுடன் பத்திரமாக கீழே இறங்கினார்.

சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த மீட்புப் பணியில் கீழே இறக்கப்பட்ட அந்த ஊழியர் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்