சிங்கப்பூரின் வர்த்தகச் சூழலில் எதிர்பார்க்கப்பட்ட வேலைவாய்ப்புகள் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் படுமோசமாக வீழ்ச்சி காணும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சிங்கப்பூர் வர்த்தகக் கடன் துறை (எஸ்சிசிபி) மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வர்த்தகர்கள், மூத்த நிர்வாகிகள் என கிட்டத்தட்ட 200 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நான்காம் காலாண்டில் வேலைவாய்ப்பு 13.19 விழுக்காட்டுப் புள்ளிகள் வீழ்ச்சி காணும் என்று இந்த ஆய்வு காட்டுகிறது. இது முந்தைய காலாண்டில் 3.29 விழுக்காட்டுப் புள்ளிகளாக இருந்தது.
இரண்டாம் காலாண்டில் வேலை வாய்ப்பு விகிதம் -4.98 விழுக்காட்டில் இருந்து -3.29ஆக முன்னேற்றம் கண்டிருந்தது.
இந்நிலையில் இப்போது நான்காம் காலாண்டில் வேலைவாய்ப்புத் துறை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆய்வின் முடிவு ஏமாற்றம் தருவதாக உள்ளது.
உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள பொருளியல் மாற்றத்தின் விளைவே இதற்குக் காரணமாக உள்ளது என்று 'எஸ்சிசிபி'யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆட்ரி சியா கூறியுள்ளார்.
உலகத்துடன் ஒத்துப்போகும் வகையில் சிங்கப்பூர் நிறுவனங்களும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதோடு மின்மயமாக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மின்மயச் செயல்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் திறனாளர்களைப் பணியில் அமர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இவ்வகையில் மனிதவளத்தைக் குறைத்து, செலவைச் சிக்கனப்படுத்த நிறுவனங்கள் முனைப்புக் காட்டுவதாக குமாரி ஆட்ரி கூறினார்.
நிதி, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில்தான் வேலை வாய்ப்பு குறையும் என இந்த ஆய்வு காட்டுகிறது.
எடுத்துக்காட்டாக, நிதித்துறையில் மூன்றாம் காலாண்டில் +33.33 விழுக்காட்டுப் புள்ளி வேலை வாய்ப்புகள் இருந்தன. அது நான்காம் காலாண்டில் -33.33 விழுக்காட்டுப் புள்ளிகளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே, உற்பத்தித் துறையிலும் நான்காம் காலாண்டில் அதற்கு முந்தைய காலாண்டைவிட -29.41 விழுக்காட்டுப் புள்ளிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது எஸ்சிசிபி.
உலகளாவிய நிலையில் விவசாயம், சுரங்கத்துறை சார்ந்த வர்த்தகங்கள் தொடர்புடைய வேலைவாய்ப்புகளில் எவ்வித மாற்றமும் ஏற்பட சாத்தியம் இல்லை எனக் கூறப்படுகிறது.
மொத்த வியாபாரத்துறையில் வேலைவாய்ப்பு திருப்திகரமாக உள்ளது. இத்துறையில் நான்காம் காலாண்டில் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 17.65 விழுக்காட்டுப் புள்ளிகள் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மொத்தமாகக் கணக்கிடும்போது அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் சுருங்கும் என்றும் எஸ்சிசிபி கூறியது.
ஆண்டு அடிப்படையில் இந்த வேலைவாய்ப்பு விழுக்காட்டுக் குறியீடு கடந்த 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.82 ஏறுமுகமாக இருந்தது. அது இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் 4.97 விழுக்காட்டுப் புள்ளிகள் இறங்குமுகமாக இருக்கும் என எஸ்சிசிபியின் ஆய்வு காட்டுகிறது.

