மனிதவள அமைச்சு: முஸ்தஃபா சென்டரின் செலவு குறைப்பு நடவடிக்கைகள் நியாயமானவை

மனிதவள அமைச்சு: முஸ்தஃபா சென்டரின் செலவு குறைப்பு நடவடிக்கைகள் நியாயமானவை

2 mins read
b96cc19e-943e-43b9-a20a-688cfeed53fb
வெளிநாட்டு ஊழியர் ஆட்குறைப்பு உட்பட முஸ்தஃபா சென்டரின் செலவு குறைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மனிதவள அமைச்சு, அது நியாயமான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டு ஊழியர் ஆட்குறைப்பு உட்பட முஸ்தஃபா சென்டரின் செலவு குறைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த மனிதவள அமைச்சு, அது நியாயமான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டைப் புதுப்பிக்காமல் அவர்களை தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவது உட்பட நடவடிக்கைகளை மேற்கொண்ட முஸ்தஃபா சென்டருடனும் SMMWU எனப்படும் சங்கத்துடனும் அணுக்கமான தொடர்பில் இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

சங்கத்தின் ஆதரவுடன்தான் முஸ்தஃபா சென்டர் செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுத்தது என மனிதவள அமைச்சின் பேச்சாளர் இன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

இதற்கு மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என்றார் அவர்.

வேலை அனுமதிச்சீட்டைப் புதுப்பிக்காமல், விமானக் கட்டணத்தைச் செலுத்தி ஊழியர்களை தாயகத்துக்கு அனுப்புவது, வேலைக்கு அழைக்கப்படாத ஊழியர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள கேட்டுக்கொண்டது ஆகியவற்றின் தொடர்பில், கடிதம் ஒன்றை முஸ்தஃபா சென்டரின் நிர்வாக இயக்குநர் முஸ்தாக் அகமது கடந்த வாரம் தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியிருந்தார்.

இந்த நடவடிக்கைகளின் தொடர்பில், கடந்த மார்ச் மாதத்திலேயே நிறுவனம் தங்களுக்குத் தெரிவித்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

அரசாங்கத்திடமிருந்து நிறுவனம் பெற்ற அனைத்து ஆதரவுகளும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக மனிதவள அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

எத்தனைபேர் இந்த செலவுக் குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படுவர் என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என முஸ்தஃபா சென்டரின் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் தொடர்பில் சங்கத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்