பணிப்பெண்களை சட்டவிரோதமாக வேறு வேலைகளில் அமர்த்தும் சம்பவங்கள்; வெளியே தெரியாதவை அதிகம்

சிங்கப்பூரில் வீட்டு வேலை பணிப்பெண்கள் சட்டவிரோதமாக வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மனிதவள அமைச்சுக்கு ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக 550 புகார்கள் வருகின்றன. 

இதர பலரும் புகார் தெரிவிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது. பணிப்பெண் சட்டவிரோதமாக வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் விவகாரம் அண்மையில் நீதிமன்ற வழக்கு ஒன்றைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. 

இந்தோனீசியாவைச் சேர்ந்த பார்த்தி லியானி என்ற பணிப்பெண் திருட்டுக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் சாங்கி விமான நிலையக் குழுமம் மற்றும் சர்பனா ஜூரோங் ஆகியவற்றின் தலைவராக இருந்த லியூ மன் லியோங்கிடம் இருந்தும் அவருடைய குடும்பத்திடம் இருந்தும் திருடியதாகக் கூறப்பட்டது. 

ஆனால் பணிப்பெண் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து திரு லியூ தான் வகித்த பதவிகளில் இருந்து விலகிவிட்டார். திரு லியூவின் புதல்வரான கார்ல் லியூவின் வீட்டையும் அலுவலகத்தையும் கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்துமாறும் அந்தப் பணிப்பெண் கேட்டுக்கொள்ளப்பட்டார். 

இத்தகைய சட்டவிரோத காரியத்தை மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்தப் போவதாக பணிப்பெண் மிரட்டியதை அடுத்து முதலாளிகள் அவருக்கு எதிராக போலிசில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள் என்று நம்புவதற்குக் காரணம் இருக்கிறது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 

வெளிநாட்டு பணிப்பெண்களைச் சட்டவிரோதமாக வேறு வேலைகளில் அமர்த்துவது தொடர்பான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் இந்தப் பிரச்சினை ஒரு சிறிய பிரச்சினை என்றுதான் காட்டுகின்றன.

ஆனால் சுமார் 12 பணிப்பெண்களைப் பேட்டிக் கண்டபோது நிலைமை வேறுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

வேறு வீட்டிலும் வேலைகளைப் பார்க்கும்படி முதலாளி தன்னைக் கேட்டுக்கொண்டதாக அந்தப் பணிப்பெண்களில் ஏழு பேர் தெரிவித்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட அது பற்றி அமைச்சிடம் புகார் தெரிவிக்கவில்லை.

தியா என்று மட்டும் தன்னைக் குறிப்பிட்டு கொண்ட ஒரு பணிப்பெண், முன்பு ஐந்து முதலாளிகளிடம் வேலை பார்த்தார். அந்த ஐவரும் தன்னை குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வீடுகளிலும் வேலை இடங்களிலும் வேலை பார்க்கச் சொன்னதாகக் கூறினார். 

வீட்டு வேலை பணிப்பெண்கள் குடும்ப வீட்டு வேலைகளை மட்டும்தான் செய்ய வேண்டும். வேலை அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் முகவரியில் உள்ள முதலாளிளுக்கு மட்டும்தான் அவர் பணியாற்ற வேண்டும். இதை முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. 

கடந்த 2017க்கும் 2019க்கும் இடையில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு தனக்கு இத்தகைய 550 புகார்கள் வந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. 

அவற்றில் முக்கால்வாசி புகார்களை மூன்றாம் தரப்பினர் தெரிவித்தனர். மற்றவை பணிப்பெண்களால் தெரிவிக்கப்பட்டவை என்று சென்ற வாரம் அமைச்சு தெரிவித்தது. 

வெளிநாட்டு பணிப்பெண்களைச் சட்டவிரோதமாக வேலையில் அமர்த்துவோருக்கு, அவர்கள் முதல் தடவையாக குற்றம் செய்திருந்தால் $10,000 வரை அபராதம் விதிக்க முடியும்.

பணிப்பெண்களை வேலையில் அமர்த்துவதற்கு அவர்களுக்குத் தடை விதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது.  

குற்றச்சாட்டு ஒவ்வொன்றையும் தான் மிகக்கடுமையானதாகக் கருதுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

சில பணிப்பெண்கள், தாங்கள் சட்டவிரோதமாக வேலையில் அமர்த்தப்படுவதால் தங்களுக்கு அவ்வளவாகச் சிரமம் இல்லை என்று கூறுகிறார்கள். 

ஆனால் இதில் முதலாளியும் பணிப்பெண்ணும் மகிழ்ச்சியடைக்கூடிய வகை யிலான நிலவரங்கள் மிக மிக அரிது என்று இந்தோனீசிய குடும்பக் கட்டமைப்பு என்ற ஆதரவுக் குழு ஒன்றின் தலைவியான திருவாட்டி உம்மை உம்மைரோ தெரிவித்தார். 

முன்பைவிட இப்போது நிலவரங்கள் மேம்பட்டு இருக்கின்றன என்றாலும் பணிப்பெண்களுக்கு ஆதரவாக மேலும் பலவற்றைச் செய்ய வேண்டி இருக்கிறது என்று இந்த மாது கருத்து தெரிவித்து இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon