சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் 8,130 பேர் ஆட்குறைப்பு

இவ்வாண்டின் முதல் காலாண்டை ஒப்புநோக்க, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக இருந்ததை மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

இரண்டாம் காலாண்டில் 8,130 பேர் ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் வேலை இழந்தனர். ஜூலையில் வெளியான முதற்கட்ட மதிப்பீடுகளில் இந்த எண்ணிக்கை 6,700 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதைக் காட்டிலும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 3,220 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆட்குறைப்பு மூலம் இவ்வாண்டின் முற்பாதியில் 11,350 பேர் வேலை இழந்தனர்.

நிறுவனங்கள் மேற்கொண்ட செலவுக் குறைப்பு நடவடிக்கைகளும் அரசாங்க ஆதரவுத் திட்டங்களும் கொவிட்-19 நெருக்கடி வேலைகள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம் என்றும் இல்லையேல் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கலாம் என்றும் என அமைச்சு கூறியது.

கொரோனா நோய்ப் பரவல் ஏற்பட்ட வீழ்ச்சியை எதிர்த்து நிறுவனங்கள் போராடி வருகின்றன. இத்தகைய சூழலில், வாரத்தில் வேலை நாட்கள் குறைப்பு அல்லது தற்காலிகப் பணிநீக்கம் மூலம் இரண்டாம் காலாண்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பாரா அளவிற்கு 81,720ஆக அதிகரித்தது.

கொரோனா பரவத் தொடங்கியபின் சிங்கப்பூரர்களுக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் 3.5 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம், ஜூனில் 4 விழுக்காடாகவும் ஜூலையில் 4.3 விழுக்காடாகவும் கூடியது.

உள்ளூர்வாசிகளைப் பொறுத்தமட்டில், மார்ச்சில் 3.3 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம், ஜூனில் 3.8 விழுக்காடாகவும் ஜூலையில் 4.1 விழுக்காடாகவும் அதிகரித்தது.

உள்ளூர்வாசிகள், வெளிநாட்டினர் என அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மார்ச்சில் 2.4 விழுக்காடாக இருந்தது. அந்த விகிதம் பின்னர் ஜூன் மாதத்தில் 2.8 விழுக்காடாகவும் ஜூலை மாதத்தில் 3 விழுக்காடாகவும் உயர்ந்தது.

2009ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளியல் நெருக்கடிக்குப் பிறகு இதுவே ஆக மோசமான வேலையின்மை நிலவரம் எனக் கூறப்படுகிறது.

மனிதவள அமைச்சு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மாதந்தோறும் வேலையின்மை விகிதத் தரவுகளைச் சேகரித்து வருகிறது. இதனால், காலாண்டுக்கு ஒருமுறை என்றில்லாமல், இனிமேல் மாதந்தோறும் வேலையின்மை பற்றிய புள்ளிவிவரத்தை அமைச்சு வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon