அதிக பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 7வது இடத்திலிருந்து 58வது இடத்துக்கு சாங்கி விமானம் நிலையம் இறங்கியுள்ளது.
கொவிட்-19 கிருமி சாங்கி விமான நிலையத்தின் வர்த்தகத்தையும் அழித்துவிட்டது. தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிட்டால், அதன் வழக்கமான பயணிகள் எண்ணிக்கையில் இப்போது 1.5 விழுக்காட்டு பயணிகளுக்கு மட்டுமே சேவை வழங்குகிறது; 17 விழுக்காட்டு விமானச் சேவைகள் மட்டுமே இப்போது செயல்படுகின்றன.
உலகின் 49 நகரங்களுக்கு மட்டுமே நேரடி விமான சேவையை வழங்குகிறது.
இந்தப் புள்ளிவிவரங்களை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் சாங்கி விமான நிலையக் குழுமத்திற்கும் (சிஏஜி) தேசிய விமான சேவையான சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கும் (எஸ்ஐஏ) “கடுமையான நெருக்கடியை” ஏற்படுத்தியுள்ளன என்றார்.
சாங்கி விமான நிலையக் குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் இதர விமானத் துறை நிறுவனங்கள் அரசாங்கத்தின் வேலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அதிக அளவிலான பலன்களைப் பெற்றதாகவும் திரு ஓங் குறிப்பிட்டார். மேலும், இந்த நிறுவனங்களுக்கும் விமானப் பயணத் துறைக்கும் இயன்ற அளவுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார் அவர்.