அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு நல்கிய சிங்கப்பூர்

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு சிங்கப்பூரும் கைகொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

டிரம்ப்புக்கு சிகிச்சையளிப்பதற்காகச் சோதனை நோயெதிர்ப்புப் பொருள் கலவையை உருவாக்கியபோது, சிங்கப்பூர் நோயாளிகள் மூவரின் ரத்த மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன.

டிரம்ப்பின் சிகிச்சையில் ஒத்துழைக்கும்படி அமெரிக்க உயிர்தொழில்நுட்ப நிறுவனமான ‘ரீஜெனரான்’ விடுத்த வேண்டுகோளை சிங்கப்பூரின் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் ஏற்றுக்கொண்டது.

ரத்த மாதிரிகளைச் சேகரிப்பதற்காக கொரோனா தொற்றிலிருந்து தேறியவர்களில் 20 பேர் வரை தேர்வு செய்யும்படி தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நெறிமுறை ஒப்புதலையும், நோயாளிகளுக்குத் தகவல் தெரிவித்து அவர்களின் ஒப்புதலையும் பெற்ற பிறகு, தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் நோயாளிகள் ஐவரைத் தேர்வு செய்தது.

அவ்வேளையில், நோயெதிர்ப்புப் பொருள் கலவையை உருவாக்கப் போதுமான மாதிரிகள் பெறப்பட்டுவிட்டதாக 'ரீஜெனரான்' நிறுவனம் தங்களுக்குத் தகவல் அளித்தது என்று தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் தொற்றுநோய் ஆய்வு, பயிற்சி அலுவலக இயக்குநரும் மூத்த ஆலோசகருமான இணைப் பேராசிரியர் டேவிட் லை விவரித்தார்.

இருந்தபோதும், நோயெதிர்ப்புப் பொருள் கலவையை உருவாக்கும் முயற்சியின் தொடக்கத்தில் சிங்கப்பூர் நோயாளிகள் ஐவரின் இரத்த மாதிரிகளில் மூன்றை 'ரீஜெனரான்' பயன்படுத்திக்கொண்டது.

ரீஜெனரான் நிறுவனத்தின் REGN-COV2 தடுப்பு மருந்து இரண்டு 'ஆன்டிபாடி'களின் கலவை. அவற்றில் ஒன்று கொவிட்-19க்கு காரணமான கிருமியுடன் பிணைந்து அதற்கு எதிராகப் போரிடும் வேளையில், கொவிட்-19க்கு காரணமான கிருமி மனித செல்லுக்குள் செல்வதைத் தடுப்பது மற்றொன்று ஆன்டிபாடியின் செயல்பாடு.

இந்த சிகிச்சை முறையில் கொவிட்-19க்கு காரணமான கிருமி திரிபு நிலையை அடைவதோ தப்பிப் பெருகுவதோ சிரமம் என்று கூறப்படுகிறது.

அந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன், ‘ஆக்டிவ்-3’ எனும் உலக அளவிலான மூன்றாம் கட்ட ‘மோனோகுளோனல்’ நோயெதிர்ப்புப் பொருள் சோதனையிலும் சிங்கப்பூர் பங்குகொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய அந்தச் சோதனை முயற்சிக்கு உலகம் முழுவதும் இருந்து 1,000 நோயாளிகளைத் தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இறுதியில் அல்லது 2021 ஜனவரியில் ‘ஆக்டிவ்-3’ சோதனை நிறைவுறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!