'அனைத்துலக விமானப் போக்குவரத்து முழுமையாக மீள ஈராண்டுகள் ஆகலாம்'

'அனைத்துலக விமானப் போக்குவரத்து முழுமையாக மீள ஈராண்டுகள் ஆகலாம்'

2 mins read
aa21cc3d-5327-4e00-a3d2-50e74021bf72
படம்: GOV.SG -

கொவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு, அனைத்துலக விமானப் போக்குவரத்து முழுவதுமாகத் திரும்ப குறைந்தது ஈராண்டுகள் ஆகலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.

நாடுகள் எல்லைகளைத் திறப்பதற்கு உதவ செயல்திறன்மிக்க தடுப்பூசியை உருவாக்கி, அது பரவலாகக் கிடைக்கும்படி செய்ய வேண்டியது அவசியம் என்று அமைச்சர் ஓங் வலியுறுத்தி இருக்கிறார்.

"உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பரவலாகக் கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் பயணம் செய்யவும் வேறு நாடுகளுக்குச் செல்லவும் மக்களிடம் நம்பிக்கை ஏற்படும். அப்போதுதான் விமானப் போக்குவரத்துத் துறை முழுவதுமாக அதன் சொந்தக் காலில் நிற்கும்," என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போது அமைச்சர் ஓங் கூறினார்.

"அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை நான் ஊகிக்க முடியாது. குறைந்தது ஈராண்டுகள் ஆகலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்," என்று திரு ஓங் சொன்னார்.

"நாம் படிப்படியாக எல்லைகளைத் திறந்து, நம்மை ஒரு மையமாக உருவாக்கிய முக்கிய இணைப்புகளை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

2019 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிட, இவ்வாண்டு ஆகஸ்ட்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 98.4% குறைந்திருந்தது.

இதனிடையே, குறைந்தது 2024ஆம் ஆண்டு வரை பயணிகள் விமானப் போக்குவரத்து மீளும் எனத் தெரியவில்லை என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தில் ஏறத்தாழ 290 விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உறுப்பினராக உள்ளன.

அண்மையில் அச்சங்கம் நடத்திய கருத்தாய்வில், 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனில் பயணம் செய்யமாட்டோம் என்று 83 விழுக்காட்டினர் தெரிவித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்