சுடச் சுடச் செய்திகள்

கொவிட்-19 பரிசோதனைக்கு ஊழியர்களை அனுப்பத் தவறிய 2 நிறுவனங்களின் வேலை அனுமதிச்சீட்டு சலுகை தற்காலிகமாக ரத்து

கொவிட்-19 தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ‘ஆர்ஆர்டி’ எனப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனைக்கு ஊழியர்களை அனுப்பத் தவறிய இரண்டு நிறுவனங்களின் வேலை அனுமதிச் சீட்டு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, அவர்கள் பரிசோதனைக்கு அனுப்பாத 2 ஊழியர்களை அவர்கள் இனிமேல் பணியில் அமர்த்த முடியாது. இந்த சலுகை ரத்து மீட்டுக்கொள்ளப்படும் வரை அவர்கள் புதிய வெளிநாட்டு ஊழியர்களையும் வேலை அனுமதிச் சீட்டில் பணிக்கு அமர்த்த முடியாது.

“இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இங்கு மாற்று வேலை தேடுவதற்கு கால அவகாசம் அளிக்கப்படும். விதிமீறலில் அவர்களுக்குப் பங்கு இல்லை,” என மனிதவள அமைச்சு, பொருளியல் மேம்பாட்டு வாரியம், கட்டட கட்டுமான ஆணையம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து நேற்று (அக்டோபர் 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

அவ்விரு நிறுவனங்களும் தலா ஒரு ஊழியரைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. அவ்வாறு அனுப்பாததற்கான செல்லத்தக்க காரணங்களை அவை தெரிவிக்கவுமில்லை, பரிசோதனையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கவுமில்லை. அதனால் நடவடிக்கை எடுத்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

ஊழியர்களை ஆர்ஆர்டி பரிசோதனைக்கு அனுப்புவது செப்டம்பர் 5ஆம் தேதி கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலான ஊழியர்கள் பரிசோதனைக்குச் சென்றனர், அல்லது பரிசோதனைக்கான பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 2,200 ஊழியர்கள் இன்னும் பரிசோதனைக்குச் செல்லவில்லை. அதனால் அவர்கள் பணிக்குத் திரும்ப இயலவில்லை.

உரிய காரணங்களின்றி ஊழியர்களைப் பரிசோதனைக்கு அனுப்பாத நிறுவனங்கள், பரிசோதனைக்குச் செல்லத் தவறும் ஊழியர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

அத்தகைய ஊழியர்களின் வேலை அனுமதி அட்டையை ரத்து செய்வது, நிறுவனங்களின் வேலை அனுமதி சலுகையை ரத்து செய்வது போன்ற தண்டனைகள் விதிக்கப்படலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon