சிங்கப்பூரில் மரண தண்டனையிலிருந்து தப்பிய மலேசியர் கோபி ஆதவன்

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆடவரின் தண்டனை குறைக்கப்பட்டு உள்ளது. 

மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மலேசியரான 32 வயது கோபி ஆதவனுக்கு நேற்று 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 பிரம்படிகள் விதிக்கப்பட்டன. 

அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நாளிலிருந்து தண்டனைக்காலம் தொடங்குவதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மேல்முறையீட்டு நீதிபதிகள் ஆண்ட்ரூ பாங், ஜுடித் பிரகாஷ், டே யோங் குவாங், ஸ்டீவன் சோங் ஆகியோர் அடங்கிய அமர்வு, கோபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை  மறு
பரிசீலனை செய்து தள்ளுபடி செய்தது. 

2019ஆம் ஆண்டில் நைஜீரியரான அடிலி சிபுய்க்கி எஜிகே தொடர்பான வழக்கை அடிப்படையாகக் கொண்டு கோபிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. 

தெரிந்தே குற்றம் செய்வதற்கும் சந்தேகம் இருந்தும் அதை உறுதிப்படுத்தாமல் செயலில் இறங்குவதற்கும் வித்தியாசம் இருப்பதாக அடிலியின் வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

சிங்கப்பூருக்குள் தாம் கொண்டு வந்த பொட்டலங்களில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் இருந்தது தமக்குத் தெரியாது என்று கோபி தெரிவித்தார். 

பொட்டலங்களில் ஹெராயின் இருப்பதைத் தெரிந்தே கோபி அவற்றை சிங்கப்பூருக்கு கொண்டு வந்தார் என்பதை அரசாங்க வழக்கறிஞர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

2014ஆம் ஆண்டில் கைது செய்யப்படுவதற்கு முன்பு, கோபி சிங்கப்பூரில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார். 

அவர் அன்றாடம் ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்குப் பயணம் செய்தார்.
இந்நிலையில், அவருக்கு வினோத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

போதைப்பொருள் கலந்த சாக்லெட்டுகளை சிங்கப்பூரில் விநியோகம் செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அவர் கோபியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இவ்வகை போதைப்பொருள் டிஸ்கோ விடுதிகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் என்றும் அதை விநியோகம் செய்வது கடுமையான குற்றம் இல்லை என்றும் அவர் கோபியை நம்பவைத்ததாக அறியப்படுகிறது.

முதலில் மறுப்பு தெரிவித்த கோபி, பிறகு தமது மகளின் அறுவை சிகிச்சைக்காகப்  பணம் தேவைப்பட்டதால் பொட்டலங்களை விநியோகம் செய்ய இணங்கினார்.

எட்டு அல்லது ஒன்பது முறை அவர் அந்தப் பொட்டலங்களை சிங்கப்பூரில் விநியோகம் செய்ததாகவும் ஒவ்வொரு முறையும் அவருக்கு 500 ரிங்கிட் கிடைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் கோபி கைது செய்யப்பட்டார். 40.22 கிராம் எடை கொண்ட ஹெராயினை சிங்கப்பூருக்குள் கடத்திய குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் 2017ஆம் ஆண்டில் அவரது தண்டனையை உயர் நீதிமன்றம் குறைத்தது. இதையடுத்து, 2018ஆம் ஆண்டில் அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ததை அடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் கோபிக்கு மீண்டும் மரண தண்டனையை விதித்தது.

இதற்கிடையே, கோபிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் அரசாங்க வழக்கறிஞர்கள் அதிகப்படியாகச் செயல்பட்டதாக அவரது வழக்கறிஞர் எம். ரவி கூறியதற்கு தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசாங்க வழக்கறிஞர் முறையற்ற வகையில் செயல்பட்டதாக திரு ரவி கூறியதற்கு அது மறுப்பு தெரிவித்தது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon