சுடச் சுடச் செய்திகள்

2020 இறுதிக்குள் சிங்கப்பூரில் மூன்றாம் கட்டத் தளர்வு

கொவிட்-19 சூழலையொட்டி சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளின் மூன்றாம் கட்டத் தளர்வு இவ்வாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரலாம் என்று இன்று (அக்டோபர் 20) நடைபெற்ற, கொவிட்-19ஐ கையாளும் அமைச்சுகள் நிலை பணிக்குழு தெரிவித்தது.

நாட்டில் பரிசோதனைகளும் தொடர்புகளைத் தடமறிதலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் சமூகத்தில் தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து குறைவாக இருந்தால் அது சாத்தியம் என்று தெரிவிக்கப்பட்டது.

மூன்றாம் கட்டத் தளர்வின் அங்கமாக, வெளி இடங்களில் 8 பேர் வரை ஒன்றுகூட அனுமதிக்கப்படும். அதேபோல, 8 பேர் வரை உறவினர்கள், நண்பர்களைப் பார்க்க அவர்களது வீடுகளில் கூடலாம்.

அதேபோல அருங்காட்சியகங்கள், வழிபாட்டுத் தலங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் 50 பேர்களுக்கான பல பிரிவுகளில் கூடுதலானோர் அனுமதிக்கப்படக்கூடும்.

ஆனால், மூன்றாம் கட்டத் தளர்வு அறிவிக்கப்படுவதற்கு முன்பு சில முக்கியமான அம்சங்களைக் கவனத்தில் கொண்டு நாட்டின் கொவிட்-19 தொற்றை கட்டுக்குள் வைப்பது அவசியம் என்று, மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட தளர்வு குறித்த தகவல்களை வழங்கிய கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

சிறிய குழுக்களிடையே தொடர்பு, பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தல், சமூகப் பொறுப்பைப் பின்பற்றுதல் போன்றவற்றைப் பின்பற்றுவது முக்கிய அம்சங்களில் அடங்கும்.

அதிக அளவிலான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதையடுத்து, பெருமளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்பு, அதன் பங்கேற்பாளர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் முன்னோடித் திட்டமும் அதில் அடங்கும்.

‘டிரேஸ்டுகெதர்’ செயலி, வில்லைகளைப் பயன்படுத்தி கூடுதல் இடங்களில் ‘சேஃப்என்ட்ரி’ பதிவுகளைச் செய்து நாட்டின் தொடர்பு தடமறிதல் நடைமுறையை வலுப்படுத்துவதும் அமைச்சர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்களில் ஒன்று. 

உள்ளூர் மற்றும் அனைத்துலக சூழலைப் பொறுத்து இந்த நடவடிக்கைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

மூன்றாம் கட்டத் தளர்வின் தொடக்க காலத்தில் மதுக்கூடம், கரவோக்கே கூடங்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மூன்றாம் கட்டத் தளர்வு என்பது கொவிட்-19க்கு முந்தைய சூழலைக் குறிப்பிடாது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon