சுடச் சுடச் செய்திகள்

மின்சாரத்தில் இயங்கும் மாடிப்பேருந்துகள்; முதல் 10 பேருந்துகள் சேவையைத் தொடங்கின

கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்கும் நோக்கில் சிங்கப்பூர், மின்சாரத்தால் இயங்கும் மாடி பேருந்துகளை பொதுப் போக்குவரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்தகைய முதல் 10 பேருந்துகள் இன்று (அக்டோபர் 27) சேவையைத் தொடங்கின.

சுவா சூ காங்கில் 983, புக்கிட் பாத்தோக் மற்றும் கிளமென்டியில் 189, செங்காங் மற்றும் பொங்கோலில் 83 ஆகிய பேருந்து சேவைத் தடங்களில் இந்தப் பேருந்துகள் இயங்கும். மற்ற பேருந்து சேவைத் தடங்களில் பின்னர் இயக்கப்படலாம்.

சீன யுடோங் - நாரி கூட்டமைப்பு வழங்கும் இந்த வாகங்னகள் பெரிதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை, அதிக சத்தமற்றவை,  டீசலில் இயங்கும் மற்ற பேருந்துகளைவிட பயன்பாட்டுக்கு எளிதானவை என்று கூறப்படுகிறது.

டீசலில் இயங்கக்கூடிய வழக்கமான பேருந்துகளைவிட இவற்றின் விலை இருமடங்கு. அதிக அளவு பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றால் பேருந்துகளின் விலை பின்னாட்களில் குறையலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இந்தப் பேருந்துச் சேவைகளின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், சிங்கப்பூர் புதிய தொழில்நுட்பத்தை எப்போதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், எந்த ஒரு தொழில்நுட்பம் அல்லது மாதிரிக்கு மட்டுமே கடப்பாடு கொள்ள அவசரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் இந்தப் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பம் மேம்படும்போது பல தெரிவுகள் வரும் என்றார்.

வழக்கமான டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக இத்தகைய மின்சாரப் பேருந்துகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கவில்லை என்ற அவர், 2040ஆம் ஆண்டுக்குள் அத்தகைய மாற்றத்துக்கு இலக்கு கொண்டுள்ளதாகச் சொன்னார்.

சிங்கப்பூரின் அனைத்து 5,800 பொதுப் பேருந்துகளும் 2040ஆம் ஆண்டுக்குள் தூய ஆற்றல் மூலங்களின் மூலம் இயக்கப்படுவது இலக்கு என்பது திட்டம். இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் சாலைகளிலும் தட்பவெப்ப சூழலிலும் மின்சாரப் பேருந்துகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் சவால்களைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பயன்பாடு உதவும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

டீசல் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடிய 50 பேருந்துகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மின்சாரத்தில் மட்டும் இயங்கக்கூடிய 60 பேருந்துகள் ஆண்டுக்கு 8,000 டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது 1,700 கார்கள் ஓராண்டுக்கு வெளியிடும் கரியமில வாயுவுக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon