உல்லாசக் கப்பல் பயணம் தொடங்கியது; பயணிகளுக்காக புதிய பரிசோதனை வளாகம்

உல்லாசக் கப்பல் பயணம் தொடங்கியது; பயணிகளுக்காக புதிய பரிசோதனை வளாகம்

2 mins read
55b9da18-7313-4fe1-b9ce-ac6c538ae2f7
ஜென்டிங் குரூஸ் லைன்ஸ்-ன் முதல் உல்லாசக் கப்பல் பயணத்தில் செல்ல சுமார் 1,700 பேர் தயாரானார்கள். படம்: வான்பாவ் -
multi-img1 of 3

உல்லாசக் கப்பல் பயணங்கள் மீண்டும் இன்று (நவம்பர் 6) தொடங்கின. அதற்கு வசதியாக மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தில், கொவிட்-19 பரிசோதனை வளாகம் ஒன்று அமைக்கப்பட்டது.

சொகுசுக் கப்பல் நிலையத்தின் கார் பேட்டையில் உள்ள மூன்றாவது மாடி, இந்த வளாகத்துக்காக ஒதுக்கப்பட்டது. 30 நிமிடங்களில் 125 பயணிகளுக்குப் பரிசோதனையை செய்து முடிக்கும் வகையில் வளாகம் வடிவமைக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு வடிவமைப்பு, கட்டுமானம், நடமாட்டத்தைத் திட்டமிடுதல், பரிசோதனையை மேற்கொள்ளுதல், நிர்வாகச் செயல்பாடுகள் போன்ற அம்சங்கள் உட்பட, இந்த வளாகத்தை அமைக்க இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனதாக சொகுசுக் கப்பல் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜென்டிங் குரூஸ் லைன்ஸ்-ன் முதல் உல்லாசக் கப்பல் பயணத்தில் செல்ல சுமார் 1,700 பேர் தயாரானார்கள். கப்பலில் செல்வதற்கு முன், கப்பல் நிலையத்தில் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

சுகாதாரப் பரிசோதனையிலோ கொவிட்-19 பரிசோதனையிலோ பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தால், கப்பலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டது.

இன்று காலை 9 மணிக்கு கொவிட்-19 பரிசோதனைகள் தொடங்கின. இரவு ஒன்பது மணிக்குக் கப்பல் புறப்படுவதற்கு முன், அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்படுவதற்காக அவர்களுக்கு வெவ்வேறு நேரங்கள் தரப்பட்டன.

கிருமித்தொற்று இல்லை என்ற நிலையில், பிற்பகல் இரண்டு மணியிலிருந்து கப்பலில் ஏறி, அங்குள்ள வசதிகளைப் பயணிகள் பயன்படுத்தி இன்புற முடிந்தது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் அக்டோபர் 8ஆம் தேதியன்று அறிவித்த 'பாதுகாப்பான உல்லாசக் கப்பல்' பயணத்தின் முன்னோட்டத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுள்ள முதல் உல்லாசக் கப்பல் இது.

குறிப்புச் சொற்கள்