உற்பத்தித் துறையில் ஏறத்தாழ 6,370 வேலைகள் வழங்கப்படுகின்றன. பத்தில் ஒரு வேலை கடல் மற்றும் கடலோரத் துறையில் வழங்கப்படுகிறது.
கடந்த மாத நடுப்பகுதியில் வழங்கப்பட்ட 10,400க்கும் அதிகமான வேலை, வேலைப் பயிற்சி வாய்ப்புகளில் இந்த எண்ணிக்கை 60 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்கு வகிக்கிறது.
மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அதன் வாராந்திர வேலை நிலவரம் குறித்த அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
உற்பத்தித் துறையில் வழங்கப்படும் 6,370 வேலைகள், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வழங்கப்பட்ட 3,200 வேலைகளைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு.
உற்பத்தித் துறைக்குள் மின்னணுவியல், துல்லிய பொறியியல், உணவு உற்பத்தி ஆகிய துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைகளில் பத்தில் ஏழு வேலைகள் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர் (பிஎம்இடி) பிரிவினருக்கானவை.
மின்னணுவியல் பொறியாளர்கள் மாதச் சம்பளமாக $4,300 முதல் $6,000 வரை பெறலாம். இடைநிலை மாதச் சம்பளம் $4,700ஆக உள்ளது.
இயந்திரப் பொறியாளர்களுக்கான மாதச் சம்பளம் $3,500 முதல் $5,250 வரை இருக்கும். அவர்களுக்கு வழங்கப்படும் இடைநிலை மாதச் சம்பளம் $4,150.
உற்பத்தி பொறியியல் தொழில்நுட்பர்களுக்கு $1,700 முதல் $2,750 வரை வழங்கப்படுகிறது. அவர்களது இடைநிலை மாதச் சம்பளம் $2,000.
மென்பொருள், இணையம் பல்லூடக மேம்பாட்டாளர்களுக்கு மாதச் சம்பளமாக $3,500 முதல் $5,000 வரை வழங்கப்படுகிறது. அவர்களது இடைநிலை மாதச் சம்பளம் $4,250ஆக இருக்கும்.
உற்பத்தித் துறையில் வழங்கப்படும் வேலைகளில் ஏறக்குறைய 30 விழுக்காடு பிஎம்இடி அல்லது மற்ற பிரிவினருக்கானவை.
உற்பத்தி அலுவலர்கள் மாதச் சம்பளமாக $1,300 to $1,650 வரை பெறலாம். அவர்களது இடைநிலை மாதச் சம்பளம் $1,440ஆக இருக்கும்.
உலோகங்களை வெப்பப்படுத்தி ஒன்றுடன் மற்றொன்றை இணைக்கும் பணிகளைச் செய்பவர்களுக்கான மாதச் சம்பளம் $1,950க்கும் $2,500க்கும் இடைப்பட்டிருக்கும். அவர்களது இடைநிலை மாதச் சம்பளம் $2,150.
வேலைகள் ஒருபுறமிருக்க, நிறுவனங்களில் 2,710 வேலைப் பயிற்சிகளும் 1,330 பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
கடந்த மாத நடுப்பகுதி நிலவரப்படி, உற்பத்தித் துறையில் வேலைகள், வேலைப் பயிற்சி, பயிற்சி வாய்ப்புகளில் ஏறத்தாழ 2,120 பேர் சேர்ந்தனர். கடந்த ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 730ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடல் மற்றும் கடலோரத் துறையில் 700 வேலைகள் உட்பட 800க்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

