உயர் பிரிவு வெளிநாட்டு தொழில்நுட்ப திறனாளர்களுக்காக சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதி அட்டை அறிமுகம்

உயர் பிரிவு வெளிநாட்டு தொழில்நுட்ப திறனாளர்களுக்காக சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதி அட்டை அறிமுகம்

2 mins read
105eba65-2ca6-4632-932c-d41975959f88
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் வர்த்தகம் தொடங்க விரும்பும் உயர் பிரிவு வெளிநாட்டு நிபுணர்கள், பெரிய நிறுவனங்களின் குழுக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய அல்லது கற்பிக்கக்கூடிய நிபுணர்களுக்கு புதிய வேலை அனுமதி அட்டை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. அத்தகையோரை சிங்கப்பூருடன் பிணைத்து, நாட்டின் உயர் திறன் தொழில்நுட்ப சூழலியலை மேம்படுத்த சிங்கப்பூர் திட்டமிடுகிறது.

Tech.Pass எனப்படும் புதிய வேலை அனுமதி அட்டையை சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் இன்று (நவம்பர் 12) அறிவித்தது. மின்வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் மிகவும் திறன் படைத்த நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வருகை அனுமதி அட்டை ஈராண்டுகளுக்கு செல்லுபடியாகும். சில நிபந்தனைகளுக்குட்பட்டு, மீண்டும் ஒரு முறை அதனை ஈராண்டுகளுக்கு புதுப்பித்துக்கொள்ளலாம். இந்த அனுமதி அட்டைக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் விண்ணப்பிக்கலாம். தொடக்கத்தில் 500 பேருக்கு இந்த அனுமதி அட்டை வழங்கப்படும்.

இந்த வட்டாரத்தில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்த இது வழிவகுக்கும் என இன்று ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்துடன் மேற்கொண்ட உரையாடலின்போது வர்த்தக, தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் குறிப்பிட்டார்.

இந்த புதிய வேலை அனுமதி அட்டைக்குத் தகுதி பெற, கீழே குறிப்பிட்டுள்ள மூன்றில் இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

- முந்தைய ஆண்டில் மாத சம்பளமாக குறைந்தபட்சம் $20,000 பெற்றிருக்க வேண்டும். - குறைந்தபட்சம் US$30 மில்லியன் மதிப்பிலான நிதி அல்லது குறைந்தபட்சம் US$500 மில்லியன் மதிப்புள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் வழிநடத்தும் பணியில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஒட்டுமொத்த அனுபவம். - US$100 மில்லியன் வருமானம் அல்லது குறைந்தபட்சம் மாதத்துக்கு 100,000 பயனாளர்களைக் கொண்ட தொழில்நுட்பப் பொருள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஒட்டுமொத்த அனுபவம்.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிர்றுவிப்பாளர்களாகவும் அவர்கள் பணிபுரியலாம்; இங்குள்ள நிறுவனங்களுக்கு ஆலோசகராக, பெரிய நிறுவனங்களில் பயிற்சி, பட்டறைகள் நடத்துபவர்களாக அவர்கள் இருக்கலாம்.

வழங்கப்பட்ட அனுமதி அட்டையைப் புதுப்பிக்க பல நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். இங்கு பணிபுரிந்த ஈராண்டுகளில் குறைந்தபட்சம் $240,000 பெற்றிருக்க வேண்டும்; அல்லது மொத்த வருடாந்திர வர்த்தக செலவு குறைந்தபட்சம் $100,000 இருந்திருக்க வேண்டும்.

இந்த அனுமதி அட்டை விண்ணப்பங்களை மனிதவள அமைச்சின் ஆதரவுடன், பொருளியல் வளர்ச்சிக் கழகம் கையாளும் என்று திரு சான் குறிப்பிட்டார்.

அனைத்துலக அளவில் போட்டித்தன்மைமிக்க குழுக்களுடன் இணைந்து பணிபுரிய உள்ளூர் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்