நிகழ்ச்சிக்கு முன் பரிசோதனை: நல்ல ஏற்பாடு, விரைவாக நடந்தது, பாதுகாப்பான உணர்வு

நிகழ்ச்சிக்கு முன் பரிசோதனை: நல்ல ஏற்பாடு, விரைவாக நடந்தது, பாதுகாப்பான உணர்வு

2 mins read
754e531e-4c24-49f8-a409-060924fc5e6a
மூக்கில் இருந்து குச்சி மூலம் திரவம் பெறப்பட்டது. பிறகு அவர்கள் தனித்தனியான நான்கு இடங்களில் காத்திருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொடர்பு தகவல் அமைச்சின் மாநாடு இன்று (நவம்பர் 16) மரினா சேண்ட்ஸ் பெருங்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடந்தது.

அதில் கலந்துகொண்ட சுமார் 200 பேருக்கு மாநாட்டு இடத்திற்கு வெளியில் முன்னதாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.

யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்பது தெரியவந்தது. நிகழ்ச்சிக்கு முன்னதாக நடந்த ஏஆர்டி பரிசோதனையில் முடிவுகள் வேகமாகத் தெரிந்துவிடும். என்றாலும் வழக்கமாக நடத்தப்படும் பரிசோதனை அளவுக்கு இது துல்லியமாக இருக்காது.

மாநாடு காலை 9 மணிக்குத் தொடங்கியது. அதில் கலந்துகொண்டவர்கள் காலை 7.45 மணி முதல் வரத் தொடங்கினர்.

நான்கு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த வரிசைகளில் அவர்கள் நின்றனர். அமைச்சு குறுஞ்செய்தி அனுப்பி அவர்களைச் சரிபார்த்து பரிசோதனை அடையாள வில்லையும் கொடுக்கப்பட்டது.

மூக்கில் இருந்து குச்சி மூலம் திரவம் பெறப்பட்டது. பிறகு அவர்கள் தனித்தனியான நான்கு இடங்களில் காத்திருந்தனர்.

பிறகு குறுஞ்செய்தி மூலம் வந்த முடிவைக் காட்டிவிட்டு அவர்கள் மாநாட்டு இடத்தின் உள்ளே சென்றனர்.

டாய்கர் என்ற இயந்திர மனித சாதன நிறுவனத்தை ஏற்படுத்தியவரும் அதன் தலைமை நிர்வாகியுமான டாக்டர் ஷினுஹி அர்ரோயோ என்பவர், மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்.

"எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் எளிமையாக, வேகமாக நடந்தது," என்று அவர் தெரிவித்தார்.

இதுவே தனது முதல் பரிசோதனை என்று தெரிவித்த அவர், எல்லாம் நன்கு திட்டமிடப்பட்டு சிறப்பாக நடந்ததாகக் கூறினார்.

"மாநாட்டில் கலந்துகொள்வதால் எந்த பாதிப்பும் இருக்காது என்பது உறுதிபட தெரிந்ததால் நிம்மதியாக இருந்தது.

"பாதுகாப்பு இடைவெளியுடன் கூடிய இத்தகைய ஏற்பாடு மேலும் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது," என்றும் டாக்டர் ஷினுஹி கூறினார்.

அதேபோல் இன்ஜினியரிங் குட் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோஹன் அன்னூர், பரிசோதனை நடைமுறை வசதியாக இருந்தது என்றார்.

பரிசோதனை முழுவதும் நிபுணத்துவ ரீதியில் நடத்தப்பட்டது. எல்லாம் 15 முதல் 20 நிமிடங்களில் முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்