பிரதமர் லீ: கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதில் பின்தங்கிவிடாமல் இருக்க பல்வேறு ஏற்பாடுகளைச் செய்கிறது சிங்கப்பூர்

2 mins read
7b8e27ba-2f13-43ca-ad49-b6ade98d7e8c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தடுப்பூசி கிடைக்கத் தொடங்கியதும் அதைப் பெறுவதில் நாம் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக, பல்வேறு கொவிட்-19 தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து அதைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் சிங்கப்பூர் செய்துள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

மக்களை கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்கச் செய்வதில் மேலை நாடுகளைக் காட்டிலும் ஆசிய நாடுகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன என்று பிரதமர் லீ கூறினார்.

"கொரோனா தொற்றைத் தடுப்பதில், எங்கு பெரும் விளைவு ஏற்படுமோ அந்நாடுகளுக்குத் தடுப்பூசி விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அதுவே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சிறந்த வழி என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனாலும், நடைமுறையில் அது மிகவும் சிரமம் என நினைக்கிறேன்," என்று திரு லீ சொன்னார்.

'புளூம்பெர்க்' செய்தி நிறுவனத்திற்கு இன்று (நவம்பர் 17) அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி கிடைத்ததும் அதைப் பெறுவதில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவுசெய்ய சிங்கப்பூர் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது.

கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களுடனும் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அண்மையில், தான் உருவாக்கியுள்ள தடுப்பூசி 90% செயல்திறன்மிக்கதாக உள்ளது என அறிவித்த ஃபைஸர் நிறுவனம், டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்வி நிலைய ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் அமெரிக்காவின் 'ஆர்க்டியூரஸ் தெரபியூட்டிக்ஸ்' நிறுவனம் ஆகியனவும் அவற்றுள் அடங்கும்.

பல்வேறு நிறுவனங்களும் உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசிகள் சோதனையில் வெற்றிபெறும் எனத் தாம் நம்புவதாகக் கூறிய பிரதமர் லீ, சில ஆண்டுகாலத்தில் கொரோனா தடுப்பூசிகள் பரந்த அளவிலும் கட்டுப்படியான விலையிலும் கிடைக்கலாம் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்