சுடச் சுடச் செய்திகள்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகும் ஆலயத்தின் செயலாளராகத் தொடர்ந்தவருக்கு $7,000 அபராதம்

சிங்கப்பூரில் இந்து ஆலயம் ஒன்றின் செயலாளராக இருந்த ஒருவருக்கு நீதிமன்றம் $7,000 அபராதம் விதித்துள்ளது.

நேர்மையின்றி நடந்து கொண்டது உள்ளிட்ட குற்றங்களின் தொடர்பில், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர், ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து அதே பதவியில் இருந்ததையடுத்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகும் ஆலய அறங்காவலர் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டதை நேற்று (நவம்பர் 19) 65 வயதான ராதா கிருஷ்ணன் செல்வகுமார் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சிராங்கூன் ரோட்டில் இருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் பதிவு செய்யப்பட்ட அறநிறுவனத்தின் உறுப்பினராக இருந்தார் அவர். அந்த அமைப்பின் நிர்வாகம் முறையின்றி இருந்ததாக 2018அம் ஆண்டில் அறநிறுவன ஆணையாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. 

கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி, 10 குற்றச்சாட்டுகளுக்காக செல்வகுமாருக்கு $80,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அறநிறுவனங்களின் சட்டப்படி, மோசடி, ஊழல், லஞ்சம், ஏமாற்று வேலை போன்ற குற்றங்கள் செய்ததாக நிரூபிக்கப்பட்ட ஒருவர் அறநிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினராகவோ, முக்கிய அதிகாரியாகவோ இருக்க முடியாது.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் செயலாளராக 2011ஆம் ஆண்டில் அவர் நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டில் சட்டம் திருத்தப்பட்ட பிறகு அந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட முதல் நபர் அவர்.

ஆலயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் என்ற முறையில் அவர் ஆலயத்தின் தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டதுடன், ஆலயத்தின் சார்பில் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட மூவரில் ஒருவராகவும் இருந்தார்.

அவர் மீதான குற்றம் 2017ஆம் ஆண்டில் நிரூபிக்கப்பட்ட பிறகும், அவர் ஆலயத்தின் செயலாளராகத் தொடர்ந்தார். 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் அவருக்கு மாதந்தோறும் $10,450 வழங்கப்பட்டது.

ஆலயத்தின் நிதி நிர்வாகத்தில் ‘கடும் முறைகேடு’ இருந்ததை அறநிறுவன ஆணையாளர் அலுவலகம், 8  மாத விசாரணைக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கண்டுபிடித்ததையடுத்து, திரு செல்வகுமார் உட்பட ஆலயத்தின் முக்கிய குழு உறுப்பினர்கள் அவர்களது பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2014ஆம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஆலய நிதியின் காவலர்களாக இருக்க வேண்டிய முக்கிய குழு உறுப்பினர்கள் ‘கவனக்குறைவு, விவேகக் குறைவு’  ஆகியவற்றுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையர் தனது அறிக்கையில் அப்போது தெரிவித்திருந்தார்.

அத்தகைய நடத்தை ஆலயத்தின் நிதிகள் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்தை விளைவித்தது.

$500,000 வரையிலான பண வழங்கல்களுக்கு போதிய ஆதரவு ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, ஆலய நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள மேலும் 3 குழு உறுப்பினர்களை ஆணையர் நியமித்தார்.

ஏர்னெஸ்ட் & யங் நிறுவனத்தின் பங்காளியான திரு ஷேகரன் கே.கிருஷ்ணன், ரெயின்போ அக்ராஸ் பார்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமன் ராஜாகாந்த், நிதி  கட்டுப்பாட்டாளரான திரு பாஸ்கரன் அம்பிகாபதி ஆகியோரே அந்த மூவர்.

செல்வகுமார் தனது பதவி விலகல் கடிதத்தை 2018ஆம் ஆண்டு மே மதம் 7ஆம் தேதி அளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செல்வகுமாரின் குற்றச் செயலுக்காக அவருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon