சுடச் சுடச் செய்திகள்

அமரர் லீ குவான் இயூவின் உயிலை தவறாகக் கையாண்ட வழக்கறிஞர் 15 மாதங்களுக்கு இடைநீக்கம்

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் மருமகளான மூத்த வழக்கறிஞர் லீ சுயெட் ஃபெர்ன், 15 மாத காலம் இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.  

திரு லீயின் கடைசி உயிலைக் கையாண்டதில் அந்த வழக்கறிஞர்  தவறாக நடந்துகொண்டு இருக்கிறார் என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் முடிவு செய்து அவரை நீக்கி வைத்துள்ளது.

“திரு லீயின் கடைசி உயிலை வேகமாக நிறைவேற்ற வழக்கறிஞர் திருவாட்டி லீ உதவி இருக்கிறார். 

“அந்த உயில்படி கணிசமாக பலன் அடையக்கூடியவரான தனது கணவரின் உத்தரவுகளைக் கண்மூடித்தனமாக திருவாட்டி லீ பின்பற்றி இருக்கிறார். 

“இவற்றின் மூலம் ஒரு வழக்கறிஞர், ஒரு சொலிசிடருக்குப் பொருத்தமில்லாத வகையில் அவர் தவறாக நடந்துகொண்டு இருக்கிறார்,” என்று எழுத்து மூலமான தீர்ப்பில் அந்த மூவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், மேல்முறையீட்டு நீதிபதி ஜூடித் பிரகாஷ், நீதிபதி ஊ பி லி ஆகியோர் அடங்கிய அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.

வழக்கறிஞர்கள் தவறாக நடந்தார்களேயானால் அதுபற்றி விசாரிக்கும் ஆக உயரிய ஒழுங்குமுறை அமைப்பு இந்த மூவர் நீதிமன்றமே ஆகும்.  

திரு லீ குவான் இயூவின் கடைசி உயில் 2013 டிசம்பர் 17ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. அந்த உயிலைத் தயாரிப்பதிலும் நிறைவேற்றுவதிலும் வழக்கறிஞர் திருவாட்டி லீ பங்காற்றினார். 

அந்தப் பங்கை மையமாகக் கொண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. திரு லீயின் கடைசி உயில், அவருடைய ஆறாவது உயிலில் இருந்து பல வழிகளில் மாறுபட்டு இருந்தது. 

திரு லீயின் சொத்துகளை அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுப்பது, எண் 38 ஆக்ஸ்லி ரோடு முகவரியில் உள்ள திரு லீயின் வீட்டை இடிப்பது ஆகியவை இவற்றில் அடங்கும். 

திரு லீ, தன்னுடைய வழக்கமான வழக்கறிஞரான குவா கிம் லியுடன் விவாதித்திருந்த, அவர் விரும்பி இருந்த சில மாற்றங்கள் கடைசி உயிலில் இல்லை என்பதை அந்த நீதிமன்றம் சுட்டியது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணை நடந்தது. 

வழக்கறிஞர் திருவாட்டி லீ நிபுணத்துவ ரீதியில் தவறாக நடந்து கொண்டிருக்கிறார் என்பதால் அவரை வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என்று சட்டக் கழகம் வாதிட்டது. 

வழக்கறிஞர் திருவாட்டி லீ, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு லீ குவான் இயூவின் புதல்வரான திரு லீ சியன் யாங்கின் மனைவி ஆவார். அவர் 37 ஆண்டுக்கும் அதிக காலமாக வழக்கறிஞராக தொழில் நடத்தி வருகிறார். 

ஆகஸ்ட் மாத விசாரணையின் போது முன்னிலையான திருவாட்டி லீயின் வழக்கறிஞர்கள்,  தன் கட்சிக்காரருக்கு எதிராக அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

திரு லீ ஏழு உயில்களை எழுதி இருந்தார். முதல் ஆறு உயில்களை அவருடைய வழக்கறிஞர் திருவாட்டி குவா கிம் லி தயாரித்தார். 

ஆனால் கடைசி உயிலில் திருவாட்டி குவா சம்பந்தப்பட்டு இருக்கவில்லை.  

“பல ஆண்டு காலம் வழக்கறிஞராக இருந்து வந்துள்ள திருவாட்டி லீ கணிசமான அனுபவம் உள்ளவர். 

“ஆனால் அவரின் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, எந்தவொரு சாக்குபோக்குக்கும் இடமில்லாதபடி இருக்கின்றன,” என்று நேற்று தன்னுடைய தீர்ப்பில் மூவர் நீதிமன்றம் குறிப்பிட்டு  இருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon