சுடச் சுடச் செய்திகள்

பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக பங்ளாதேஷை சேர்ந்த கட்டுமான ஊழியர் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக 26 வயது பங்ளாதேஷ் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இம்மாதம் 2ஆம் தேதி கைது செய்யப்பட்ட அகமது ஃபைசாலிடம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சுயதீவிரவாதத்துக்குட்பட்ட அகமது ஃபைசால், தமது சமயத்துக்கு ஆதரவாக ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபட நினைத்திருந்ததாக இன்று (நவம்பர் 21) உள்துறை அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

முஸ்லிமான ஃபைசால், பங்ளாதேஷிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு கட்டுமான ஊழியராக வந்தார். ஐஎஸ் அமைப்பின் இணையவழிப் பிரசாரத்தின் மூலம், அதற்கு அடுத்த ஆண்டு சுயதீவிரவாதக் கொள்கைகளைக் கைக்கொண்டார்.

தாம் அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்க, அவர் புனைப்பெயர்களில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கினார்; ஆயுதம் தாங்கிய வன்முறை தொடர்பான தகவல்களை அந்தக் கணக்குகளின் மூலம் பரப்பினார் ஃபைசால்.

தம் சொந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதற்காக மடக்கக்கூடிய கத்திகளையும் வாங்கியதாக அவர் விசாரணையின்போது அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.

ஆனால், தற்போது வரையிலான விசாரணைகளில், அவர் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்தும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

இந்த கத்திகளை பங்களாதேஷுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள இந்து போலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த ஃபைசால் எண்ணம் கொண்டிருந்ததாக, இன்று நடைபெற்ற சமய மறுவாழ்வு குழுவின் (RRG) 16வது வருடாந்திர கருத்தரங்கில் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

 பயங்கரவாதத்துக்கு ஃபைசால் நிதியுதவி செய்தாரா என்பது பற்றி வர்த்தக விவகாரத் துறை விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் திரு சண்முகம் தெரிவித்தார்.

கருத்தரங்கில் பேசிய அமைச்சர், உள்துறைப் பாதுகாப்புத் துறையின் விசாரணைகளுக்குப் பிறகு, மேலும் 15 பங்ளாதேஷ் நாட்டவர், ஒரு மலேசியர் ஆகியோர் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். பிரான்சுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டதற்காகவும் வன்முறையைத் தூண்டி சமூக கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததற்காகவும் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், பிரான்சில் கடந்த மாதம் நிகழ்ந்த தாக்குதல்களுடன் ஃபைசாலுக்குத் தொடர்பு இல்லை என உள்துறை அமைச்சு தெரிவித்தது.

ஆனால், ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அங்கு சென்று சிரியா அரசாங்கத்துடன் போரிட விரும்பியதாகவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சிரியாவில் போரிடும் மற்றொரு போராளி அமைப்பான ஹயட் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்புக்கு உதவும் நோக்கில் ஃபைசால் நன்கொடை அளித்ததாகவும், அல்-காய்தா, அல்-ஷபாப் உட்பட மற்ற பயங்கரவாத குழுக்களுக்கு தம் ஆதரவைத் தெரிவித்ததாகவும் அமைச்சு தெரிவித்தது.

சிரியாவுக்கு மட்டுமின்றி, காஷ்மீருக்கும் சென்று இஸ்லாம் சமயத்தின் எதிரியாக  அவர் கருதுபவர்களுடன் போரிடவும் விரும்பி, ஆயுதங்கள் தொடர்பான காணொளிகளையும் அவர் இணையத்தில் பார்த்ததும் தெரியவந்துள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon