பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள்: கொவிட்-19 தொடர்பான காரணங்களுக்காக 140 மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி

பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள்: கொவிட்-19 தொடர்பான காரணங்களுக்காக 140 மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி

2 mins read
65dc14b6-ea0e-4106-9491-c5b966de8436
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

கொவிட்-19 கொள்ளை நோய் நெருக்கடியில் இவ்வாண்டு தொடக்கநிலை 6 மாணவர்கள் தங்களின் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (பிஎஸ்எல்இ) எழுதினார்கள். இன்று (நவம்பர் 25) வெளியான தேர்வு முடிவுகளை 39,995 மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். கிருமித்தொற்று சூழலால் பள்ளி மண்டபத்திற்குப் பதிலாக மாணவர்கள் தங்களின் வகுப்பறைகளுக்குச் சென்று முடிவுகளைப் பெற்றனர்.

பிஎஸ்எல்இ மாணவர்களின் வயது கருதி ஒவ்வொருவருடனும் பெற்றோரில் ஒருவர் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள துணையாக பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டது.

தேர்வுக்காலத்தின்போது கொவிட்-19 தொடர்பான காரணங்களுக்காக 140 தொடக்கநிலை 6 மாணவர்களுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

தீவிர சுவாசத்தொற்று ஏற்பட்ட நிலையில் இவர்கள் மருத்துவ விடுப்பில் இருந்தனர். அதனால், தேர்வை எழுத முடியாமலும் போனது. 2020ஆம் ஆண்டு பிஎஸ்எல்இ மாணவர்களில் இக்குறிப்பிட்ட பிரிவினர் 0.4 விழுக்காட்டினர்.

தொற்றுச் சூழலில் அனைத்து மாணவர்களிடத்திலும் நியாயத்தைக் கட்டிக்காக்க, பல அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டதாக சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் (எஸ்இஏபி) திங்கட்கிழமையன்று தெரிவித்தது.

ஐந்தாம் ஆண்டாக 98.4% மாணவர்கள் பிஎஸ்எல்இ தேர்வில் தேறி உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல உள்ளனர். 2016ஆம் ஆண்டிலிருந்து இருந்துவரும் இந்த விகிதம், 1960ஆம் ஆண்டில் தேசிய தேர்வாக பிஎஸ்எல்இ அறிமுகம் கண்டதிலிருந்து ஆகச் சிறந்த தேர்வு முடிவு விகிதமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், 66.3% மாணவர்கள் விரைவுநிலைக்குத் தகுதிபெற்றுள்ளனர். 21.2% மாணவர்கள் வழக்கநிலை ஏட்டுக்கல்வி நிலைக்கும் 11 விழுக்காட்டினர் வழக்கநிலை தொழில்நுட்ப நிலைக்கும் தகுதிபெற்றுள்ளனர்.

மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கான தங்களின் தெரிவுகளை அடுத்த செவ்வாய்க்கிழமை வரை இணையம் வழியாக சமர்ப்பிக்கலாம்.

உயர்நிலைப்பள்ளி தொடர்பான முடிவுகள் டிசம்பர் 22ஆம் தேதியன்று வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்