ஈசூன் சமூக மருத்துவமனை வளாகத்தில் ரத்த சுத்திகரிப்பு நிலையம்

ஈசூன் சமூக மருத்துவமனை வளாகத்தில் ரத்த சுத்திகரிப்பு நிலையம்

2 mins read
edda860f-210d-4885-ac21-848c56169d3e
ஈசூன் சமூக மருத்துவமனை வளாகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய சிறுநீரக அறநிறுவனம், புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை திங்கட்கிழமை திறந்தது.

ஒரு மருத்துவமனை வளாகத்திற்குள் கட்டப்பட்டு இருக்கும் முதலாவது சுத்திகரிப்பு நிலையம் அது.

இதன் காரணமாக நோயாளிகள் தங்களுக்குத் தேவைப்படும் பல வகை சிகிச்சைகளை வசதியாக பெற வழி ஏற்படும்.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம், ஈசூன் சமூக மருத்துவமனை வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனைக்குப் பக்கத்தில் இருக்கிறது.

கூ டெக் புவாட் மருத்துவமனையில், கடுமையான காயங்கள், நோய்களுக்கு அறுவை சிகிச்சை போன்ற குறுகிய கால சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

அதே வேளையில், அறுவை சிகிக்சைகளுக்குப் பிறகு நோயாளிகள் குணமடைவதற்குத் தேவையான சிகிச்சைப் பராமரிப்புகளை வழங்குவதில் ஒருமித்த கவனம் செலுத்துகிறது ஈசூன் சமூக மருத்துவமனை.

கூ டெக் புவாட் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரத்த சுத்திகரிப்பு நோயாளி ஒருவர், ஈசூன் சமூக மருத்துவமனையில் குணமடைவதற்கான மறுவாழ்வு பராமரிப்பையும் அதே வேளையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையையும் பெற இப்போது இந்தப் புதிய நிலையம் வழி அமைத்துக் கொடுக்கிறது.

இதே போல, ஈசூன் சமூக மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்றால் உடனே அருகே இருக்கும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அவரை எளிதாக மாற்றி விடலாம்.

இந்தப் புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக தேசிய சிறுநீரக அறநிறுவனத்திற்கு கெப்பல் கார்ப்பரேஷன் $2 மில்லியன் வழங்கி இருக்கிறது.

இந்தப் பங்காளித்துவ உறவு மூலம் தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் நோயாளிகள் பாதுகாப்பான, வசதியான ரத்த சுத்திகரிப்புச் சிகிச்சையைப் பெறுவதற்கு ஆதரவு அளிக்க முடியும் என்று கெப்பல் நிறுவனம் நம்புவதாக அதன் தலைமை நிர்வாகி லோ சின் ஹுவா தெரிவித்தார்.

புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் 22 படுக்கைகள் இருக்கின்றன. அவை 132 நேயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும்.

ரத்த சுத்திகரிப்பு சிகிச்சையின் போது நோயாளியின் உடலில் உள்ள ரத்தக் குழாயுடன் இரண்டு ஊசிகள் பொருத்தப்படும்.

ஒரு ஊசி வழியாக ரத்தம் அவருடைய உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு அது சுத்திகரிக்கப்பட்டு பிறகு மறு ஊசி வழியாக உடலின் உள்ளே சுத்தமான ரத்தம் செல்லும். இந்த அறநிறுவனத்தின் இதர சுத்திகரிப்பு நிலையங்களைப் போல் அல்லாது இந்தப் புதிய நிலையத்தில் கூடுதலாக ஒரு வசதியும் இருக்கிறது.

அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்பது ஒருபுறம் இருக்க, தூய்மையான திரவம் வயிற்றில் ஒரு குழாய் வழியாகச் செலுத்தப்பட்டு அதன்மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படும் சேவையையும் இந்தப் புதிய நிலையம் வழங்கும்.

இது பற்றி விளக்கிய சிறுநீரக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் ஊய், இந்தப் புதிய நிலையம் நோயாளிகளுக்கு ஆதரவாக பரந்த அளவிலான சேவைகளை வழங்கும் என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்