முழு மின்னிலக்க வங்கி உரிமங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் இரு நிறுவன அமைப்புகளுக்கு வழங்கி உள்ளது.
சிங்கப்பூரின் முதல் ஏற்பாடான இது நிதித் துறையை தாராளமாக்கும் நோக்கம் கொண்டது; நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது.
கிராப்-சிங்டெல் கூட்டு நிறுவனமும் தொழில்நுட்ப பெருநிறுவனமான சீயும் அந்த உரிமத்தைப் பெற்றுள்ளன. ஆணையம் நேற்று இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. வங்கிக் கணக்கு திறப்பது, அந்தக் கணக்கில் பணம் போடுவது, ரொக்கக் கழிவு அட்டை (டெபிட் கார்ட்), கடன்பற்று அட்டை (கிரடிட் கார்ட்) போன்றவற்றுக்கான சேவைகள் - வழக்கமான இந்தச் சேவைகள் அனைத்தையும் இந்த முழு மின்னிலக்க வங்கிகள் அளிக்கும்.
ஆனால், இவை எதுவும் மனித வருகையற்ற முறையில் இணையம் வழியாக நடந்தேறும்.
இருப்பினும் டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி போன்ற வங்கிகள் ஏற்கெனவே இணையம் வழியாகவும் கைபேசிச் செயலிகள் வழியாகவும் அளித்து வரும் வங்கிச் சேவைகளிலிருந்து இவை மாறுபட்டவை. முழு மின்னிலக்க வங்கிகள் நிறுவனக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்கும்.
மொத்த விற்பனை மின்னிலக்க வங்கி உரிமங்களின் வெற்றியாளர்களையும் ஆணையம் அறிவித்தது. ஆண்ட் குரூப் அவற்றுள் ஒன்று. கிரீன்லேண்ட் ஃபை னான்சியல் ஹோல்டிங்ஸ், லிங்லாஜிஸ் ஹாங்காங், பெய்ஜிங் கோ-ஆபரேட்டிவ் ஈகுவிட்டி இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் மேனேஜ் மென்ட் முதலானவை கூட்டாக இணைந்த அமைப்பு மற்றோர் உரிம வெற்றியாளர்.
பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் இவை வங்கிச் சேவை ஆற்றும். வெற்றிபெறும் விண்ணப்பதாரர்கள் முறையான நிறுவனத் தேவைகளையும் உரிமங்களுக்கான முன்நிபந்தனைகளையும் உரிம அங்கீகாரத்துக்கு முன்னர் பெற்றிருப்பது அவசியம் என்று ஆணையம் நேற்று தெரிவித்தது.
முழு மின்னிலக்க வங்கி உரிமம், மொத்த விற்பனை மின்னிலக்க வங்கி உரிமம் ஆகியவற்றைப் பெற்றுள்ள இந்த நான்கு நிறுவன அமைப்புகளும் பத்து போட்டியாளர்களை வென்றுள்ளன. ரேஸர் யூத் பேங்க், ஓசிம் நிறுவனம் ரோன் சிம்மின் வி3 குரூப் மற்றும் ஈஸி-லிங்க் உள்ளிட்டவை அந்தப் போட்டியாளர்கள். உரிமம் வென்றுள்ள மொத்தமின்னிலக்க வங்கிகள் 2022ஆம் ஆண்டு தொடக்கப் பகுதியில் தங்களது வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான திறன் கொண்ட மின்னிலக்க வங்கிகளைத் தேர்வு செய்ய கடுமையான, தகுதி அடிப் படையிலான நடைமுறை பின்பற்றப்பட்டதாக ஆணையத்தின் தலைவர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.
"இவை தரமான நிதிச் சேவைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, தற்போது போதுமான அளவுக்கு சேவைகளைப் பெறாத வர்த்தகங்களையும் தனிநபர்களையும் இவை கவனத்தில் கொள்ள வேண்டும். வருங்கால மின்னிலக்க பொருளியலுக்குக் கைகொடுக்கும் சிங்கப்பூரின் நிதித் துறையை இவை பலப்
படுத்தும்," என்றார் திரு மேனன்.
மின்னிலக்க வங்கி முயற்சிகளை சிங்கப்பூர் மட்டும் மேற்கொள்ளவில்லை. மே 2019ல் மேலும் நான்கு மெய்நிகர் வங்கி உரிமங்களை ஹாங்காங் வழங்கியதால் மொத்த எண்ணிக்கை எட்டு ஆனது. பிலிப்பீன்ஸ், சீனா, ஜப்பான், தென்கொரியா போன்றவையும் மெய்நிகர் வங்கிச் சேவைகளைக் கொண்டுள்ளன.
வழக்கமான வங்கிச் சேவைகள் இணையம் வழி நடைபெறும்

