வேலை தேடுவோர் அடுத்த ஆண்டில் மேம்பட்ட ஆள்சேர்ப்பு வாய்ப்புகள் பற்றி அறியக்கூடும் என்று இன்று (டிசம்பர் 7) வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் முதலாளிகளில் ஐந்தில் ஒருவர் அடுத்த ஆண்டில் தங்கள் ஊழியர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள காலாண்டைவிட 2021ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் முதலாளிகளில் 20 விழுக்காட்டினர் இன்னும் அதிகமான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவார்கள் என்று 'மேன்பவர் குருப்' எனும் ஆள்சேர்ப்பு நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.
முதலாளிகளில் 66 விழுக்காட்டினர் தங்கள் ஊழியரணியில் எந்த மாற்றத்தையும் செய்யமாட்டார்கள் என்றும் 4 விழுக்காட்டினர் தங்களின் மொத்த ஊழியரணியின் ஆட்குறைப்பை மேற்கொள்ளக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், வேலைவாய்ப்பின் நிகர அளவு 15% அதிகரிக்கும். இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 17% அதிகரிப்பு என்றும் காலாண்டு அடிப்படையில் பார்க்கும்போது இதுதான் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆக வலுவான எதிர்பார்ப்பு என்றும் ஆய்வு கூறுகிறது.
இதே ஆய்வில் பங்கேற்ற இதர ஆறு ஆசிய பசிபிக் நாடுகளுடன் ஒப்பிடுகையில், முதல் நிலையில் உள்ள தைவானுக்கு அடுத்த நிலையில் சிங்கப்பூரில்தான் வலுவான நிகர வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பு உள்ளது. தைவானின் விகிதம் 23% அதிகரிப்பு.
சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பு ஐந்து முதல் பத்து விழுக்காடு. ஆகக் கடைசியாக ஹாங்காங்கின் எதிர்பார்ப்பு -2%.
மொத்த வேலைவாய்ப்புகளில் அதிகரிப்பை எதிர்பார்க்கும் முதலாளிகள் விகிதத்திலிருந்து மொத்த வேலைவாய்ப்புகளில் குறைவை எதிர்பார்க்கும் முதலாளிகள் விகிதத்தைக் கழித்தால் நிகர வேலைவாய்ப்பு விகிதம் கிடைக்கும்.

