இந்தியாவின் மகத்தான ஆற்றலில் தொடக்கக் காலத்திலேயே சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்றைய நிகழ்வில் தெரிவித்தார்.
இதே போன்று இந்தியாவில் இதற்கு முன்பே நம்பிக்கை கொண்டிருந்த திரு கோ சோக் டோங், இந்தியாவில் முதலீடு செய்யவும் அதனுடன் வர்த்தகத்தில் ஈடுபடவும் வேண்டும் என்று சிங்கப்பூருக்கு அறிவுறுத்தி இருந்தார் என்று திரு லீ குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து பொருளியல் உறவுகள் வலுவடைந்தன. 1995ஆம் ஆண்டில் தொடங்கி 2000ஆம் ஆண்டுவரை இந்தியாவில் சிங்கப்பூர் செய்திருந்த முதலீடுகள் ஐந்து மடங்காகியதை பிரதமர் சுட்டினார்.
பின்னர், வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவம் கையெழுத்தானது. இந்தியா-சிங்கப்பூர் இடையிலான தூதரக உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் நோக்கில் 2015ஆம் ஆண்டில் உத்திபூர்வ பங்காளித்துவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
தற்காப்பு, நிதி, கலாசாரம் உள்ளிட்ட பல அம்சங்களில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் ஆழமான ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பதாக இது அமைந்தது.
தற்போது உலக அரங்கில் இந்தியா முக்கிய சக்தியாக மாறிவிட்டது என்று தெரிவித்த திரு லீ, உலகநாடுகளின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்தியா ஏற்படுத்தி வருவதாகச் சொன்னார்.
"இந்தியா இல்லாமல், அதன் ஆக்கபூர்வத்தன்மை இல்லாமல், பருவநிலை மாற்றம், உலக வர்த்தக நிறுவனத்தின் சீர்திருத்தம், இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பாதுகாப்பு போன்ற பெருமளவு உத்திபூர்வ விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் முழுமை அடையாது," என்றார் திரு லீ.
சிங்கப்பூர்-இந்தியா உறவுகளைப் பற்றி கூறும் 'இந்தியா அன் அவர் மைண்ட்ஸ்' என்ற புத்தகத்தை என்யுஎஸ் கலாசார மையத்தில் வெளியிட்டபோது பிரதமர் இவ்வாறு கூறியிருந்தார்.
380 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம், 50 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், டிபிஎஸ் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா போன்றவர்கள் எழுதிய கட்டுரைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
கொவிட்-19 பல நாடுகளை வாட்டி, அதனால் பொருளியல் ஆட்டங்கண்டு இருந்தாலும் இந்தியாவின் நீண்டகால எதிர்காலம் பிரகாசமானதாக, நம்பிக்கை அளிப்பதாக உள்ளதென திரு லீ தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசியான்-இந்தியா உரையாடல் உறவுகளை அடுத்த ஆண்டு ஒருங்கிணைக்கும் பொறுப்பை சிங்கப்பூர் ஏற்க உள்ளது.
இந்நிலையில் இருதரப்புக்கும் இடையிலான உறவை ஆழமாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதில் ஒன்று, எதிர்காலத்தில் வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவத்தில் இணைவதன் பலன்களை மறுபரிசீலனை செய்வதே என்றார். சென்ற மாதம் இப்பங்காளித்துவ ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கையெழுத்திட்டன.
"இந்த ஒப்பந்தம் முடிவாகும்வரை அனைத்து நாடுகளின் மனதிலும் இந்தியா இருந்தது. இந்தியாவுக்கு எப்போதும்s கதவு திறந்திருக்கும்," என்றார் திரு லீ.
இந்தியா என்றுமே சிங்கப்பூருக்கு மதிக்கத்தக்க ஒரு நண்பனாகவும் பங்காளியாகவும் இருக்கும் என்பதைச் சரியான நேரத்தில் நினைவுறுத்த புதிய புத்தகம் உதவும் என்றார் அவர்.
புத்தகத்தில் இந்தியாவின் ஆற்றல், அதன் பொருளியல், அரசியல் தன்மை, சிங்கப்பூருடனான அதன் காலனித்துவத்துக்கு முந்தைய உறவுகள், இந்தியர்களைப் பற்றி சிங்கப்பூரர்களின் கண்ணோட்டம் போன்ற பலதரப்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

