கிறிஸ்துமஸ் விழாக்காலம் வந்துவிட்டது.
பலர் கொண்டாட்ட உணர்வுடன் இருந்தாலும் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. சில காலத்திற்குக் கிருமி தொடர்பான கட்டுப்பாடுகள் நீடிக்கும்.
சமூக பாதுகாப்பு இடைவெளியை உணவு, பானக் கடைகள் விழாக்காலத்தின்போது கடைப்பிடிப்பதை உறுதி செய்ய, இந்த வார இறுதி முதல் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கூடுதல் சோதனைகள் ஆண்டிறுதி விழாக்காலத்தை உள்ளடக்கி அடுத்த சில வாரங்களுக்குத் தொடரும் என்று கூறப்படுகிறது.
"இந்த விழாக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை சந்திக்க விரும்புவதும் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பிரபலமான பான விடுதிகளுக்கு செல்ல விரும்புவதும் புரிந்துகொள்ளக் கூடியதே.
எனினும், சமூக பாதுகாப்பு இடைவெளிக்கான நடைமுறைகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில், இல்லத்துக்கு ெவளியே சாப்பிடச் செல்வது பலவித அபாயங்களை உள்ளடக்கியது," என்று அமைச்சு தெரிவித்தது.
"விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று அமைச்சின் அறிக்கை நினைவூட்டியது.
கொவிட்-19 2020 விதிமுறைகளின்படி, இரண்டாம் கட்டத் தளர்வுக் காலத்தில் வீட்டிற்கு வெளியே சமூக ஒன்றுகூடலாக ஐவருக்கு மேல் கூடியிருக்கக்கூடாது.
சமூக ஒன்றுகூடலாக ஐவருக்கு மேற்பட்டோர், வெவ்வேறு இடங்களில் அமர்வதாக இருந்தாலும் உணவு, பான விடுதிகள் அவர்கள் கூடுவதற்கான முன்பதிவை ஏற்கக்கூடாது.
ஐவருக்கு மேல் கூடுவதற்குத் தடை என்ற விதிமுறை இம்மாதம் 28ஆம் தேதியன்று மூன்றாம் கட்டத் தளர்வு வரும்வரை அமலில் இருக்கும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பல்வேறு பிரிவினர் ஒருவருடன் ஒருவர் கலந்துறவாடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
அத்துடன், உணவு, பான விடுதிகளில் இரவு 10.30 மணிக்கு மேல் மதுபானம் அருந்துவதற்குத் தடை உள்ளது என்பதையும் அமைச்சின் அறிக்கை நினைவுபடுத்துகிறது.
"கொவிட்-19 கிருமி இன்னமும் பெரிய அச்சுறுத்தலாக விளங்குவதால், நாம் அனைவரும் இந்த விழாக்காலத்தில் அதற்கெதிராக விழிப்புடன் இருக்க ேவண்டும். இதில் சமூகப் பாதுகாப்பு இடைவெளியை துச்சமாக மதித்து அதைக் கடைப்பிடிக்கத் தவறுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது," என்று அந்த அறிக்கை கூறியது.
"அவர்களுக்கு எதிராக அபராதம், தற்காலிக மூடல் நடவடிக்கை, போன்றவற்றுடன் சட்ட நடவடிக்கைகள் முழுமையான அளவு மேற்கொள்ளப்படும்," என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் அக்டோபர் மாதம் நடந்த ஒன்றுகூடலில் 75 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 20 நாட்களுக்குச் செயல்பாடுகளை நிறுத்த அந்த உணவகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

